×

தை அமாவாசை: காவிரி கரையில் பொதுமக்கள் முன்னோர் வழிபாடு

ஈரோடு : தை அமாவாசையையொட்டி ஈரோடு காவிரி கரையில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.தை அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டனர். அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி கரையில் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, காவிரி ஆற்றில் நீராடினர். பின்னர், பரிகார மண்டபங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

தற்போது காவிரி ஆற்றில் 5,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீரின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு துறையினரும் ரப்பர் படகுகள் மூலமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோயிலில் தை அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் வழக்கமாக நடைபெறும் ஆறு கால பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல சென்னிமலை சுற்று வட்டார பகுதியில் உள்ள குல தெய்வ கோயில்களிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாநகரில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், கஸ்தூரி அரங்கநாதர் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், சோழீங்கேஸ்வரர் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில், சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நேற்று நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள், வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

நேற்று தை அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. கோயில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை வழிபட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

The post தை அமாவாசை: காவிரி கரையில் பொதுமக்கள் முன்னோர் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Tai ,Cauvery ,Erode ,Tai Amavasi ,Kaveri ,Erode… ,
× RELATED மேலாண்மை ஆணையத்தை கண்டித்து...