- பொருளாதாரக் குற்றங்கள் காவல்துறை
- நியோமேக்ஸ் நிதி நிறுவனம்
- சென்னை
- பொருளாதார குற்றப்பிரிவு
- மதுரை, எஸ் காலனி
- நியோமேக்ஸ் பிராப்டீஸ் (பி) லிமிடெட்.
- தின மலர்
சென்னை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை, எஸ்.எஸ். காலனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜக நிர்வாகி வீரசக்தி, கபில் உள்ளிட்ட பலர் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட கமலக்கண்ணன், கபில் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்நிலையில், கமலக்கண்ணனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, விருதுநகர் மாவட்டம் இ.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவரும், கபில் என்பவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி ராஜ்குமார் என்பவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, ‘‘இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன’’ என்றார். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, ‘‘வழக்குப்பதிவு செய்து 6 மாதம் ஆகிறது. இதுவரையில் 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் மட்டும் ரூ.194 கோடிக்கு மோசடி நடந்துள்ளது.
பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளோம். அந்த சொத்துக்களின் மதிப்பீட்டை தெரிந்து கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் விபரம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் விளக்கத்தை பொறுத்து சொத்துக்களின் மதிப்பு தெரியவரும்’’ என்றார். இயக்குநர்கள் தரப்பில் வழக்கை சுமூகமாக முடிக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன? இவற்றில் எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்களை முடக்க திட்டம் உள்ளது என்பது குறித்து போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன.30க்கு தள்ளி வைத்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனத்தில் மற்றொரு நிறுவனமான டிரான்ஸ்கோ பிராப்பர்ட்டிஸ் நிறுவன இயக்குனர் அசோக் மேத்தா மற்றும் டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் நிறுவன இயக்குனர் மதிவாணன் கைது செய்யப்பட்டார்.
The post நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 இயக்குனர்களை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்..!! appeared first on Dinakaran.