×

தேசிய நல்லாசிரியர் விருது மேலும் ஊக்கத்தை தரும்: மதுரை, தென்காசி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களை தேர்வு செய்து கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஒன்றிய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி வருகின்றன. அதன்படி, 2023க்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில், தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு பள்ளியில் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வரும் மாலதி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், மாலதியின் சேவையை பாராட்டும் வகையில் 2021-22ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதையும் தமிழக அரசு வழங்கி உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் மாலதி கூறுகையில், ‘இந்த விருதால் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஆசிரியர்களை மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற ஊக்கமாக அமையும். பொதுவாக அறிவியல் பாடம் கடினமானதாக மாணவர்களுக்கு தோன்றும். அதை எளிதாக படிக்கும் விதமாக கற்பித்ததால் மாணவர்கள் ஆர்வமுடன் அறிவியல் பாடத்தை படிக்க தொடங்கினர். நான் 2008ம் ஆண்டு திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தேன்‌. 2012 ஜூலை முதல் வீ.கே.புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து விருது வழங்கி ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் கூறுகையில், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி ஆசிரியராக இருந்து வருகிறேன். இப்பகுதி கிராமப்புற மாணவர்களை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதே எனக்கான இலக்கு. இதில் ஓரளவு வெற்றியும் பெற்று வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலரும் காவல்துறை, ரயில்வே, ராணுவம் உள்ளிட்டவற்றில் உயர் பதவிகளில் இருக்கின்றனர். மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை சொந்த செலவில் சுற்றுலா அழைத்துச் செல்வது, அவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

இப்படி 10 மாணவர்களை இனம் கண்டு அவர்களை விமானச் சுற்றுலாவாக மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்று திரும்பினேன். இளைய தலைமுறையினரான மாணவர்கள் இந்த நாட்டின் சொத்து. இவர்களை ஆரோக்கியத்துடனும், சாதனையாளராகவும் வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை. அந்த கடமையை ஒரு ஆசிரியனாக நானும் நிறைவேற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். செப்.5ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் இந்த 2 ஆசிரியர்களுக்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

The post தேசிய நல்லாசிரியர் விருது மேலும் ஊக்கத்தை தரும்: மதுரை, தென்காசி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tenkasi ,Chennai ,Teachers' Day ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் ஷவர்மா சாப்பிட்டதால்...