×

நத்தம் அருகே நீராகாரம் தானம் அளித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு: 18ம் நூற்றாண்டை சேர்ந்தது

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள லி.வலையப்பட்டியில் பழங்கால கோயில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக மதுரையைச் சேர்ந்த கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, வரலாற்று ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம், தனசேகரன், மணிகண்டன், பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள கோயில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: நத்தம் அருகே உள்ள லி.வலையப்பட்டி உள்ள நல்லதங்காள் கோயில் அருகே 5 அடி உயரம், ஒரு அடி அகலம், இரண்டரை அடி நீளம் கொண்ட செவ்வக கல்லானது மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது.

இக்கல்வெட்டு 19 வரிகளுக்கும் மேல் எழுத்துக்கள் கொண்டதாக உள்ளது. கல்வெட்டில் சூரியன், சந்திரன் நடுவில் முத்தலை சூலாயுதம் பொறிக்கப்பட்டுள்ளது. 19 வரிகளுக்கு கீழே கல்வெட்டு மண்ணில் புதைந்து இருந்ததால் எழுத்துகளை என்னவென்று அறிய முடியவில்லை.

கல்வெட்டு சொல்லும் செய்தியானது இங்கு மடம் கட்டி, சோலை அமைத்து, கிணறு வெட்டி அவ்வழியாக செல்லும் வழிப்போக்கர்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் வழங்க தர்மம் அளிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. மேலும், இதை தவறாக பயன்படுத்தினால் என்ற வார்த்தையுடன் கல்வெட்டு காண முடிகிறது. இக்கல்வட்டானது கிபி 18ம் நூற்றாண்டை சேர்ந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post நத்தம் அருகே நீராகாரம் தானம் அளித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு: 18ம் நூற்றாண்டை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Natham ,Nattam ,L. Valayapatti ,Nattam, Dindigul district ,Madurai ,Neerakaram ,
× RELATED நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்