×

தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டது

சென்னை :தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்டவாரம் ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் சென்னையில் கடந்த 18 முதல் 27ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதில் 22ம் தேதி வரை கலைப்பண்பாட்டு இயக்கக கூட்ட அரங்கத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 18ம் தேதி ஆட்சி மொழிச் சட்ட வரலாறு” தலைப்பில் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் பயிற்சி அளித்தார். 19ம் தேதி “காலந்தோறும் தமிழில் ஆட்சிச் சொற்கள்” என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் முத்துவேலு தலைப்பில் பயிற்சி அளித்தார். 20ம் தேதி “மொழிப் பயிற்சி” என்னும் முனைவர் அண்ணாகண்ணன் பயிற்சி அளித்தார். 4வது நாள் “மொழிபெயர்ப்பு” என்னும் தலைப்பில் இளவேனில் முல்லை, 5வது நாள் “கணினித் தமிழ்” என்னும் தலைப்பில் சண்முகம் பயிற்சி அளித்தனர்.

6வது நாள் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தில் ஒரு நிகழ்வான வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தல், கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றில் பெயர்ப்பலகைகளைச் சரியாகத் தமிழ்ச் சொற்களில் எழுதி வைக்கும் பொருட்டு “வணிகர் சங்கங்களின் கூட்டம்” நடைபெற்றது. 7வது நாள் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணியை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் பெருமக்கள் மற்றும் மாநிலக் கல்லூரியில் பயிலும் 300 மாணவர்கள் கலந்துக் கொண்டு ஆட்சிமொழிச் சட்டவார விளம்பரப் பதாகைகள் ஏந்தி “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற வாசகங்களை முழக்கமிட்டு விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றனர்.

The post தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Tamil Official Language Law Week ,CHENNAI ,official language week ,Official Language Act Week ,official language law week ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...