×

நாமக்கல் கொசவம்பட்டியில் குப்பை கிடங்கு அகற்றும் ; பணி 90 சதவீதம் நிறைவு: பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்

நாமக்கல்: நாமக்கல் கொசவம்பட்டியில் குப்பை கிடங்கு அகற்றும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டியில், நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுக்கு மேலாக, இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. ஆண்டு கணக்கில் மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளால், சுற்றுப்புற பகுதியில் நிலத்தடி நீர் கெட்டு விட்டது.

தண்ணீர் கருப்பு நிறமாக வருவதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர். குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கோடை காலங்களில் குப்பைகிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிந்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு மக்கள் மூச்சு தினறலால் பாதிக்கப்பு அடைந்தனர். பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில், நகராட்சி நிர்வாகம் நகரில் தினமும் சேகரமாகும் 20 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை, கொசவம்பட்டி உரக்கிடங்கில் கொட்டாமல், நகரில் 4 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்களை அமைத்து, அங்கு கொட்டி வந்தது.

இதனால் குப்பை கிடங்கில் புதிய குப்பைகள் கொட்டுவது, கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. கொசவம்பட்டி உரக்கிடங்கில் உள்ள 1 லட்சத்து 2 ஆயிரம் கியூபிக் கனஅடி குப்பைகளை அகற்ற ₹7.17 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் மாநில மற்றும் நகராட்சி நிதி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயோ மைனிங் என்ற பெயரில், கொசவம்பட்டி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்துக்கு, கடந்த ஆண்டு இறுதியில் டெண்டர் விடப்பட்டது. அந்த நிறுவனம் குப்பையை அகற்றுவதற்கான பணியை, கடந்த 7 மாதமாக மேற்கொண்டு வருகிறது. உரக்கிடங்கில் மலைபோல தேங்கியுள்ள குப்பைகள், எந்திரங்களின் உதவியுடன் மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரிக்கப்பட்டது. உரமாக பயன்படுத்தகூடிய மக்கும் குப்பைகளை தனியாக பிரிக்கப்பட்டது.

மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், பீங்கான், கண்ணாடி போன்ற பொருட்கள் சிமெண்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குப்பைகள் அகற்றும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள், பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு குப்பை கிடங்கு அகற்றப்பட்டு விடும். பல ஆண்டு கோரிக்கையான கொசவம்பட்டி குப்பை கிடங்கு அகற்றப்படுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியாளர்களின் ஆலோசனைப்படி, குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை 92ஆயிரம் கியூபிக் மீட்டர் கனஅடி குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உரங்கள், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்காத குப்பைகள் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் முற்றிலுமாக முடிவடையும்.  கொசவம்பட்டி குப்பை கிடங்கு, சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அந்த இடத்தில் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட, 9 ஊராட்சிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசானை வெளியானவுடன், அந்த பணிகள் துவங்கப்படும். இவ்வாறு கூறினர்.

The post நாமக்கல் கொசவம்பட்டியில் குப்பை கிடங்கு அகற்றும் ; பணி 90 சதவீதம் நிறைவு: பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kosawampatti ,Namakkal Kosavampatti ,Kosavampatti ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு...