×
Saravana Stores

மார்ச் 8ம் தேதி மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி விழாவை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மகாசிவராத்திரி பெருவிழா இந்தாண்டு 7 திருக்கோயில்கள் சார்பில் மார்ச்-8 அன்று ஆன்மிக சொற்பொழிவுகள் இசை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி பெருவிழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விழாக்களை பக்தர்களின் பங்கேற்போடு சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்ற அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, 2022 ஆம் ஆண்டு முதன்முதலில் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் மகாசிவராத்திரி பெருவிழாவானது பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2023 ஆண்டில் கூடுதலாக, திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், பேரூர், அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் சேர்க்கப்பட்டு, 5 திருக்கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “மகாசிவராத்திரி விழா கடந்தாண்டு 5 சிவத்திருத்தலங்கள் சார்பாக பெருவிழாவாக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டதை போல், இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகாசிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களையும் சேர்த்து 7 திருக்கோயில்கள் சார்பில் வருகின்ற மார்ச் 8 அன்று மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மார்ச் 8 அன்று தொடங்கி வைக்கின்றார். இவ்விழாவில் ஆன்மிகப் பெரியோர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

The post மார்ச் 8ம் தேதி மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி விழாவை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Mahashivaratri festival ,Kabaleeswarar Temple ,Mylapore ,CHENNAI ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Mahashivaratri ,Mylapore, Kabaleeswarar temple ,Hindu Religious Charities ,
× RELATED 1400 பாகநிலை முகவர்களுக்கு நலத்திட்ட உதவி