×

முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5 கோடியில் உணவகத்துடன் கூடிய நவீன படகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

திருப்போரூர்: முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உணவகத்துடன் கூடிய நவீன படகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. இந்த படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான உணவகத்துடன் கூடிய 2 அடுக்கு மிதக்கும் படகு இயக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப்பணி கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

தற்போது, படகின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இந்த நவீன படகினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அந்த வளாகத்தில் இருந்த படகு குழாம், உணவகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். அப்போது, படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து இல்லாத வகையில், அனைத்து வகையான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: “படகின் கட்டுமானப்பணிகள் முடிந்து விட்டதால் முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று விரைவில் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்’’ என்றார். இதையடுத்து, கோவளம் கடற்கரையில் உள்ள நீலக்கொடி கடற்கரை வளாகத்தை (புளூ பீச்) அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர், அங்கு செய்ய வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

* சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில் ஆய்வு
மாமல்லபுரம் இசிஆர் சாலையையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த, விடுதிக்கு நேற்று மாலை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் வந்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், செம்மொழி பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி, ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3 டி அனிமேஷன் திட்டத்துக்கான பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் அமைய உள்ள கலாச்சார பூங்கா அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5 கோடியில் உணவகத்துடன் கூடிய நவீன படகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Muttukkad ferry ,Tourism Minister ,Tirupporur ,Minister ,Rajendran ,Muttukkadu ,terminal ,Muttukkad ,Chennai ,Tamil Nadu Tourism Development Corporation ,Ferry Terminal ,Tourism ,Dinakaran ,
× RELATED விக்னேஷ் சிவன் மறுத்துள்ள நிலையில்...