×

மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கி கீழே இழுத்த பாஜ பெண் நிர்வாகி: டிரைவர், கண்டக்டரையும் ‘நாய்’ என ஒருமையில் திட்டினார்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே மாநகர பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை ‘நாய்’ போன்ற வார்த்தைகளால் ஒருமையில் பேசியும், வலுக்கட்டாயமாக அடித்து கையை பிடித்து கீழே இறக்கிவிட்ட பாஜ பெண் நிர்வாகிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கண்டக்டர், டிரைவரையும் இப்படியா பேருந்தை ஓட்டுவீர்கள் என கேட்டு ஒருமையில் திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பேருந்து கெருகம்பாக்கம் அருகே சென்றபோது, பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும், கூச்சல் போட்டவாறு பயணம் செய்தனர்.

இதை பஸ்சில் பயணம் செய்த பாஜ பெண் நிர்வாகி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்தவாறு இருந்தார். பின்னர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், கீழே இறங்கிச் சென்ற அந்த பெண், ஓட்டுநரிடம், மாணவர்கள் இவ்வாறு அபாயகரமாக தொங்கிக்கொண்டு வருகிறார்கள். இப்படியா பேருந்தை ஓட்டுவது. இதை கண்டிக்க மாட்டீங்களா என்று கேட்டு நாய் என திட்டினார். பின்னர், பேருந்தின் முன் மற்றும் பின்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்தும், நாய் என ஒருமையில் திட்டியும் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார். ஒருசில மாணவர்களை முதுகில் அடித்து சட்டையை பிடித்து இழுத்து பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு, நடந்து செல்லுங்கள்டா என ஆவேசமாக அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறினார்.

அப்போது, தான் ஒரு போலீஸ் என்று கூறிய அந்த பெண் மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்ட பின்பு பேருந்தில் இருந்த நடத்துனரிடம், ‘அரசு பேருந்தை இப்படித்தான் அஜாக்கிரதையாக ஓட்டுவீர்களா? பேருந்தின் உள்ளே இத்தனை பெண்கள் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா’ என கண்டக்டரையும் ஒருமையில் ஆவேசமாக திட்டினார். இதை கண்டதும் பேருந்தில் இருந்த பயணிகளும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் சிலை போல் அப்படியே நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை ஆவேசமாக அடித்து இறக்கிவிட்ட பெண், தன்னை ஒரு போலீஸ் என்று கூறினார். ஆனால், அவர் பாஜ பெண் நிர்வாகி என கூறப்படுகிறது. அப்படியானால் மாணவர்கள், டிரைவர், கண்டக்டரை கண்டிக்க இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. சட்டத்தை இவரே கையில் எடுத்துக் கொண்டாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

The post மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கி கீழே இழுத்த பாஜ பெண் நிர்வாகி: டிரைவர், கண்டக்டரையும் ‘நாய்’ என ஒருமையில் திட்டினார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kunradthur ,
× RELATED உரிமையாளர் வாக்கிங் அழைத்து...