×

பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்காக முக்கிய சாலைகள் அடைப்பு மாற்று பாதையில் நெரிசல் தவிர்க்க கூடுதல் போலீஸ் நியமிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

திருவாரூர்: திருவாரூரில் பழைய பேருந்து நிலைய மேம்பாடு பணிகளுக்காக நகரின் முக்கிய சாலை அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்துவதற்கு கூடுதலதாக போலீசாரை நியமித்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தின் போது புறகணிக்கப்பட்டு வந்த திருவாரூர் தொகுதியில் தற்போது பல்வேறு பணிகள் கடந்த 2 ஆண்டு காலமாக மேற்கொள்ளபப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.5 கோடி மதிப்பிலும், ரூ.3 கோடி மதிப்பில் 3 குளங்கள் சீரமைக்கும் பணியும், நகரின் தெற்கு வீதியில் ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் ஒன்று, ரூ 41 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சோமசுந்தரம் பூங்கா புனரமைக்கும் பணிகள் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.

தற்போது பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.16 கோடியே 30 லட்சமும், காய்கறி மார்க்கெட் பகுதியில் ரூ.13 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிதாக காய்கறி மற்றும் பழ கடைகளுக்கான வணிக வளாகம் கட்டுவதற்கும், ரூ.5 கோடியே 42 லட்சம் மதிப்பில் புதிய மீன் மார்க்கெட் அமைப்பதற்கும் என மொத்தம் ரூ.34 கோடியே 99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு பணி கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி மூலம் பழைய பேருந்து நிலைய பகுதி முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலையான பனகல் சாலையும் மூடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அனைத்தும் நேதாஜி சாலை, மார்க்கெட் ரோடு வழியாக பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேதாஜி சாலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

தற்போது மாற்றுபாதை என்ற பெயரில் கூடுதலான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதால் நாள் ஒன்றுக்கு பலமணி நேரம் வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட அனைவரும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் நகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்பதுடன், சாலையின் இருபுறமும் இருந்து வரும் ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டும். கூடுதலான அளவில் போக்குவரத்து போலீசாரை நியமித்திட வேண்டும் என பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்காக முக்கிய சாலைகள் அடைப்பு மாற்று பாதையில் நெரிசல் தவிர்க்க கூடுதல் போலீஸ் நியமிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Dinakaran ,
× RELATED மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின்...