×
Saravana Stores

ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கொடூரம் காசா மருத்துவமனை மீது குண்டுவீசியது யார்?: இஸ்ரேல், ஹமாஸ் மாறி மாறி குற்றச்சாட்டு; மத்திய கிழக்கு நாடுகள் கடும் எச்சரிக்கை

ஜெருசலேம்: காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல், ஹமாஸ் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளன. பாலஸ்தீன ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் நேற்றுடன் 12வது நாளை எட்டி உள்ளது. இதுவரை இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 உயிர்களும், காசாவில் 3,500 உயிர்களும் பலியாகி உள்ளன. காசாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காசாவில் ஐநா அகதிகள் முகாம், பாதுகாப்பு தங்குமிடங்களிலும் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசிய நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

காசா சிட்டியின் அல்-அஹ்லி மருத்துவமனை மீது நேற்று முன்தினம் இரவு பயங்கர ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச போர் குற்றங்களில் ஒன்றாகும். அதிலும் ஒரே இடத்தில் அப்பாவி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதலை தங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ஹமாஸ் படையினர் இஸ்ரேல் நோக்கி ஏவிய ராக்கெட்தான் தவறுதலாக மருத்துவமனையில் விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறி உள்ளார்.

வான்வழி தாக்குதலாக இருந்தால் அங்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் என்றும், இது ராக்கெட் தாக்குதல் என்பதால் தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், ஹமாஸ் படையினரின் ஒட்டுகேட்கப்பட்ட தொலைபேசி உரையாடலையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் இரு ஹமாஸ் படையினர் தங்களின் ராக்கெட் தவறுதலாக மருத்துவமனையை தாக்கியதாக பேசுகின்றனர். இதுமட்டுமின்றி இதுவரை ஹமாஸ் படையினர் இஸ்ரேல் நோக்கி ஏவியதில் 459 ராக்கெட்டுகள் தவறுதலாக காசா பகுதிக்குள்ளேயே விழுந்து வெடித்திருப்பதாகவும், அதற்கான சில சாட்டிலைட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல்களை ஹமாஸ் படை மறுத்துள்ளது. காசா சுகாதார துறை துணை அமைச்சர் யூசுப் அபு அல் ரிஸ் அளித்த பேட்டியில், ‘‘கடந்த சனிக்கிழமை அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் 2 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனை மேலாளரை தொடர்பு கொண்ட இஸ்ரேல் ராணுவம் உடனடியாக மருத்துவமனையை காலி செய்ய வேண்டுமெனவும், இந்த தாக்குதல் எச்சரிக்கை என்றும் மீறினால் பயங்கரமான தாக்குதல் நடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது. இப்போது அதை செய்துள்ளது’’ என்றார்.

இவ்வாறு இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமையை விபரீதமாக்கி உள்ளது. ஜோர்டான், ஈரான், எகிப்து, லெபனான், துனிசியா, உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையிலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இனியும் இதுபோன்ற போர் குற்றங்களை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் எச்சரித்துள்ளார். இந்த போர் அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஜோடான் மன்னர் 2ம் அப்துல்லாவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன. இது இஸ்ரேல், ஹமாஸ் போரை மேலும் விரிவுபடுத்துவதற்கான அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

* போர் நிறுத்தம் அவசியம்

காசா மருத்துவமனை மீதான தாக்குதலை தொடர்ந்து, காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டுமென 22 அரபு நாடுகளும், ஐநாவும் வலியுறுத்தி உள்ளது. ஐநா தலைவர் கட்டரஸ் மனிதாபிமான போர் நிறுத்த அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டுமென கூறி உள்ளார். காசா மருத்துவனை மீதான தாக்குதல் மிகப்பெரிய படுகொலை என கூறிய பாலஸ்தீனத்திற்கான ஐநா தூதர் ரியாத் மன்சூர், எஞ்சியிருக்கும் மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதால் அவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகுக்கும் வகையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.

* ‘எதிர் தரப்பு தாக்கியது’ இஸ்ரேலில் பைடன் ஆதரவு

தீவிர போருக்கு நடுவே, திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் வந்தடைந்தார். ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் தலைநகர் டெல் அவிவ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பைடனை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி, செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அதிபர் பைடன் கூறுகையில்,‘‘காசா மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு மிகவும் கவலை அளிக்கிறது. ஆனால் நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இது எதிர்தரப்பு அணியால் செய்யப்பட்டது போல் தோன்றுகிறது. இதை இஸ்ரேல் செய்யவில்லை. தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளை போல ஹமாஸ் படையினர் கொடூரமான தாக்குதலை இஸ்ரேலில் நடத்தி உள்ளனர். ஹமாஸ் அமைப்பு ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களை பிரதிநிதித்துவப்படுத்தாது. பாலஸ்தீனர்களை காப்பாற்றுவது ஹமாசின் நோக்கம் இல்லை. அமெரிக்க மக்கள் 31 பேரையும் அவர்கள் கொடூரமாக கொன்றுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். அதன் அடையாளமாகத்தான் இங்கு வந்துள்ளேன்’’ என்றார். பைடனை உண்மையான நண்பன் என பாராட்டிய நெதன்யாகு, ஹமாஸ் வித்தியாசமான எதிரி என்றும், அவர்களிடமிருந்து பாலஸ்தீன பொதுமக்களை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

* மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சைகள்

காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மயக்க மருந்துகள் இல்லாத நிலையில், காயமடைந்தவர்களுக்கு வேறு வழியின்றி சுய நினைவுடனேயே அறுவைசிகிச்சைகளை செய்தனர். மருத்துவர் அபு செல்மியா கூறுகையில், ‘‘எங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வேண்டும். மருந்து வேண்டும். படுக்கைகள் வேண்டும். மயக்க மருந்து வேண்டும். எல்லாமே வேண்டும். இங்கு எதுவுமே இல்லை. மருத்துவமனையின் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும். இனியும் உதவிப் பொருட்கள் காசாவிற்குள் கொண்டு வரப்படாவிட்டால் அனைத்தும் நாசமாகும்’’ என்றார்.

* பிரதமர் மோடி கண்டனம்

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘காசாவின் அல் அஹ்லி மருத்துவனையில் பல உயிர்களை பலி கொண்ட பயங்கர தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பலியான மக்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இப்போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த பாதக செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார். இதே போல் இந்த தாக்குதல் கொடூரமான பேரழிவு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* நடந்தது என்ன?

* நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.59 மணிக்கு காசா சிட்டியின் அல்-அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

* ராக்கெட் குண்டு மருத்துவமனையின் பார்க்கிங் பகுதியில் விழுந்து பயங்கர தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியது.

* அப்போது மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்தனர். வேறு இடங்களில் பாதுகாப்பில்லை என்பதால் சிலர் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்திருந்தனர். குண்டுவெடிப்பில் பலரும் உடல் சிதறியும், தலை துண்டாகியும், கை, கால்கள் துண்டாகியும் கொடூரமாக இறந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்தார்.

* மருத்துவமனையின் கீழ் தளத்தில் பெண்கள், குழந்தைகள் இருந்ததால் உயிர் தப்பியதாகவும், மேல் தளத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள், சிறுவர், சிறுமியரே பெரும்பாலும் இறந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

* இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் இறந்ததாக ஹமாஸ் அமைப்பு தகவல் வெளியிட்டது. இதனை இஸ்ரேல் மறுத்தது.

* இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா உள்ளிட்டோர் நடத்த இருந்த அரபு மாநாடு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

* ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா, ஈராக், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. அந்நாடுகளில் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரானது, சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறியது என எகிப்து அதிபர் அப்தேல் பதா எல் சிசி குற்றம்சாட்டினார்.

* பல அரபு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மோட்டார் சைக்கிளில் பேரணி சென்ற போராட்டக்காரர்கள் பிரான்ஸ் தூதரகம், ஐநா அலுவலகத்தின் முன்பாக கண்டன கோஷமிட்டனர். ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகத்தை முற்றுகையிட்டு மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

The post ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கொடூரம் காசா மருத்துவமனை மீது குண்டுவீசியது யார்?: இஸ்ரேல், ஹமாஸ் மாறி மாறி குற்றச்சாட்டு; மத்திய கிழக்கு நாடுகள் கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gaza Hospital ,Israel ,Eastern ,Jerusalem ,Hamas ,Dinakaran ,
× RELATED காசா மருத்துவமனையில் தீவிரவாதிகள் என 100 பேரை இஸ்ரேல் பிடித்துச் சென்றது