×

மோடி ஆட்சியில் மக்களின் வருமானத்தை பணவீக்கம் உறிஞ்சிவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி ஆட்சியில் பணவீக்கம் மக்களின் வருமானத்தை உறிஞ்சி விட்டது என்று காங்கிரஸ் சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில் ஊடக செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி கூறியிருப்பதாவது: மோடி ஆட்சியில் விலைவாசி உச்சத்தில் உள்ளது. பணவீக்கத்தால் 47 சதவீதம் பேர் தங்கள் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை திருப்பிக் கொடுத்து விட்டனர். மக்கள் தங்கள் குடும்பங்களை நடத்துவது கடினமாகிவிட்டது. மோடி அரசின் ஆதாய கொள்கையால், ஒரு சாதாரண குடும்பத்தினர் குடும்பம் நடத்துவது கடினமாகிவிட்டது. அவர்களது ஆதாய கொள்கைக்கு வரம்பே இல்லை. இதனால் ஏற்பட்ட பணவீக்கம் சாதாரண குடும்பத்தினரின் ஆயுள் காப்பீட்டைப் பறித்துவிட்டது. அத்தியாவசியமான ஆயுள் காப்பீட்டைக் கூட மக்கள் ஒப்படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் கொடிய பணவீக்கத்தின் விளைவு. கடந்த 5 ஆண்டுகளில் 47% பேர் தங்கள் ஆயுள் காப்பீட்டை திருப்பிக் கொடுத்துள்ளனர். பொதுமக்களின் பாக்கெட்டுகளின் நிலை இதுதான் என்றால், தேவையே இல்லை இந்த அமிர்தகாலம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ மோடி ஆட்சியில் பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உணவு முதல் கல்வி, சுகாதாரம் வரை அனைத்திற்கும் செலவினங்கள் அதிகரித்துள்ளதால் நாட்டு மக்கள் சிரமப்படுகின்றனர். பணவீக்கத்தால் எளிய மற்றும் ஏழை மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில், அவரது முதலாளித்துவ நண்பர்களில் ஒரு சிலரின் சொத்து மட்டுமே அதிகரித்து வருகிறது. மோடி ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது’ என்று அவர் தெரிவித்து உள்ளார்.

The post மோடி ஆட்சியில் மக்களின் வருமானத்தை பணவீக்கம் உறிஞ்சிவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,New Delhi ,
× RELATED எதுவும் மாறாதது போல பிரதமர் மோடி...