சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 31ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை அடுத்த மாதம் முடிவுக்கு வர உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. நீலகிரி, திருப்பத்தூர், கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. தஞ்சாவூர், சென்னை, கடலூர், தருமபுரி, மதுரை, திண்டுக்கல், சேலம், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. ஈரோட்டில் சராசரியாக 99 டிகிரி வரை வெயில் அடித்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சிதம்பரம் அண்ணாமலை நகரில் 30மிமீ, மரக்காணம், மதுராந்தகம், கொள்ளிடம் 20மிமீ, மயிலாடுதுறை, நாலுமுக்கு, பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, ஜெயங்கொண்டம் 10மிமீ மழை பெய்துள்ளது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
The post தமிழ்நாட்டில் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.