×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்; வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் 2-வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ல் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு மீது உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார்.

அமலாக்கத்துறை வாதம்:

ஜாமின் மனு தாக்கல் செய்ததால் செந்தில் பாலாஜி காவலில் இருப்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 16-ல் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட பின், சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கூற முடியாது. நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பதால் ஆட்கொணர்வு வழக்கு பொருந்தாது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

அமலாக்கத்துறைக்கு நீதிபதி கேள்வி:

அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே 8 நாட்கள் கஸ்டடி வழங்கப்பட்டு விட்டது, விசாரிக்கவில்லை என்பதற்காக சிகிச்சை நாட்களை நீதிமன்ற நாட்களாக கருதக்கூடாது என சொல்ல முடியுமா? என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், கஸ்டடி வழங்கினாலும் நீதிமன்ற நிபந்தனைகளால் செந்தில்பாலாஜியிடம் விசாரிக்கவில்லை; செந்தில் பாலாஜியை விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைத்தான் எதிர்க்கிறோம். காவலில் விசாரிக்க அனுமதி கேட்டது உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறியது அல்ல. செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க முடியவில்லை என்பது உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது என்று வழக்கறிஞர் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

காவலில் எடுக்காதது ஏன்?: நீதிபதி கேள்வி

காவலில் விசாரிக்க அனுமதி பெற்றும் செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்காதது ஏன்?; 8 நாட்களில் ஒரு நாளாவது கஸ்டடி எடுக்க முயற்சி எடுத்திருக்க வேண்டும், முடியாத பட்சத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார். உடல்நலக்குறைவாக உள்ளபோது, காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் பொறுப்பேற்க வேண்டிவரும்; அதனால்தான் நிபந்தனைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினோம் என்று துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

எல்லா வழக்குகளிலும் 41ஏ பொருந்தாது: அமலாக்கத்துறை

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41ஏ குறித்து இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மூத்த நீதிபதி இதுபற்றி எதுவும் கூறவில்லை; எல்லா வழக்குகளிலும் 41ஏ பொருந்தாது. காவல்துறை அதிகாரி கைது செய்யவில்லை என்றால் 41ஏ நோட்டீஸ் கொடுக்கலாம். உரிய ஆதாரங்கள் இருந்தால் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவு 19-ன் கீழ் கைது செய்யலாம் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றக் காவல் ஜூலை 26 வரை நீட்டிப்பு:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் மேலும் 14 நாட்கள் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைப்பு:

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா வாதத்தை நிறைவு செய்தார். இதயத்தில் 40% அடைப்பு அனைவருக்குமே இருக்கும் என அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதிட்டார். கைதான முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால் அதை கணக்கிட கூடாது எனவும் தெரிவித்தார். மேகலா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 14-ம் தேதி விசாரணை முடிக்கப்படும் என நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்; வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai Primary Session Court ,Chennai ,Senthil Palaji ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் இருந்து...