×

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது வரும் 11, 12ம் தேதிகளில் விசாரணை; ஐகோர்ட் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது வரும் 11, 12ம் தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோ வாதிட்டனர்.

செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து 3-வது நீதிபதியாக கார்த்திகேயனை தலைமை நீதிபதி நியமித்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் எந்தெந்த கருத்தில் முரண்பட்டுள்ளனர் என விளக்கி இரு தரப்பும் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அமலாக்கத்துறை தரப்பு: அமலாக்கத்துறைக்கு காவலில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து விளக்கியிருக்கிறோம். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்தும் கூறியிருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத்தில் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது குறித்தும் விளக்கியுள்ளோம் என்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி தரப்பு: கைது காரணங்களை மூத்த நீதிபதி கையாளவில்லை, இளைய நீதிபதி கையாண்டிருக்கிறார். இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர் என செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

நீதிபதி: யாரும் ஆவணங்களை பார்க்காத நிலையில் கைதுக்கான காரணங்கள் திருத்தப்பட்டுள்ளன என கூற முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இந்த அறிக்கைகளின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்கலாம் என்று குறிப்பிட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பு: அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து விளக்கி இருக்கிறோம் என்று கூறினார்.

அமலாக்கத்துறை தரப்பு: 41 ஏ இந்த வழக்கிற்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் விவாதிக்கவில்லை. அமலாக்கத்துறை கைதுசெய்யலாம்; காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர் என்று தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கு: 11, 12ம் தேதிகளில் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது வரும் 11, 12ம் தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார். 3-வது நீதிபதி புதிய உத்தரவை வழங்க முடியாது; எந்த தீர்ப்பு சரியானது என்பதை மட்டுமே தீர்மானிக்க முடியும். நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்ற அம்சங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும். காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா?, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா? முடியாதா?, போலீஸ் காவல் சட்டவிரோத காவலா? என்ற அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

11-ம் தேதி செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன்வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் 11-ம் தேதி ஆஜராகி வாதாடுகிறார். 12-ம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகிறார்.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது வரும் 11, 12ம் தேதிகளில் விசாரணை; ஐகோர்ட் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Karthikeyan ,Chennai ,ICourt ,CV ,Dinakaran ,
× RELATED வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர்...