சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க ‘காலம் உள்ளவரை கலைஞர்’ – நவீன தமிழகத்தின் சிற்பிக்கு நவீன கண்காட்சி என்ற கலைஞரின் புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று காலை திறந்து வைத்தார்.
இப்பிரம்மாண்ட அரங்கத்தில் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ‘திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை’ என 100-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் ஹாலோகிராபி தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் கலைஞர் நேரடியாக மக்களுடன் தமிழை போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் ‘வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்’ காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒரு அறையில் நவீன தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும் கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசின் மக்கள் போற்றும் அரசின் சாதனைகளை விளக்கி கூறும் 3டி காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 10ம் தேதி வரை 10 நாட்களுக்கு புகைப்பட கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, திரைப்பட கவிஞர் பா.விஜய் சென்னை மாநகர மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி ஜோசப் சாமுவேல் வெற்றி அழகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் திமுக பகுதி செயலாளர் முரளி ராஜசேகர் முரளிதரன் இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் வர்த்தக அணி லயன் உதயசங்கர் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டனர். மேலும் தங்களுடைய செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர்.
The post அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி: நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.