×

மாணவ, மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவு

சென்னை: மாணவ, மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாதி, வருமான சான்றிதழ்கள் போன்றவை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மற்றும் பள்ளி, கல்லூரிகளில் சேர இத்தகைய சான்றுகள் தேவைப்படுகிறது. இவற்றை வட்டாட்சியர்கள் அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை பெற இந்த சான்றிதழ்கள் அவசியமாகும்.

கல்வி உதவித்தொகைகளை பெறவும், சாதி வாரியாக சில நலத்திட்டங்களை பெற சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் அவசியமாகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பத்தினை உடனடியாக பரிசீலித்து தேவையற்ற காலவிரயத்தை தவிர்த்து மனுக்களை ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர் சான்றுகளை கூட்ட நெரிசல் இன்றி பெற்று செல்ல வசதியாக அதற்கென நாட்களை ஒதுக்கி வழங்க வேண்டும். சான்றிதழ்கள் பெற தேவையின்றி மாணவர்களை அலுவலகங்களுக்கும் இ-சேவை மையங்களுக்கும் அலைய விடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மாணவ, மாணவியர்களுக்கு வருவாய்த்துறையின் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட உத்தரவு அளித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக, வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் அறிவுறுத்தி உள்ளார்கள்.

இச்சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவியர்கள் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த்துறையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதமின்றி வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் கூறியுள்ளார்.

The post மாணவ, மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Department of Revenue ,Minister ,K. K.K. S.S. S.S. R Ramachandran ,Chennai ,Chief Minister ,Revenue Department ,G.K. Stalin ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...