மனம் குளிர்ந்தது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவை சாகுபடி சுமார் 5 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறுவை சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடனும், அதிகளவிலும் மேற்கொள்ள தமிழக அரசு, கடந்த சில ஆண்டுகளாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம், விவசாயிகளுக்கு உரம், இடுபொருட்கள் போன்றவற்றை மானிய விலையில் வழங்கி, அரசு ஊக்கப்படுத்துவதால், உற்பத்தி செலவு குறைகிறது. அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.61.90 கோடி, 2022-ம் ஆண்டு ரூ.61.12 கோடி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தலா ஒரு மூட்டை யூரியா, டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் ஆகியவை மானியமாக வழங்கப்பட்டன. கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நடப்பாண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.75.95 கோடியில் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி துவங்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்தன. குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்த அறிவிப்பும் கூடவே வெளியானதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது, 50 ஆயிரம் ஏக்கரில் நாற்றங்கால் தயாரிப்பு பணியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற”வேளாண் சங்கமம் 2023” விழாவில் பேசுகையில், “இந்த ஆண்டு சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை, ஆகஸ்ட் 15 வரை நீட்டித்து தரவேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை, தமிழக அரசு ஏற்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து பேசி, ரூ.75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும்’’ என்றார். இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு, விவசாயிகள் மனம் குளிர்ந்தனர். தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2021-22-ம் ஆண்டு 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி நடந்துள்ளது.

இது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஏற்பட்ட மகத்தான சாதனை ஆகும். உழவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நிலத்தடி நீரினை பயன்படுத்தி, உழவர்கள் அதிக பாசன பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பயணத்தின் தொடர்ச்சியாக, மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். விவசாயம் சார்ந்த முதல்வரின் தொலைநோக்கு பார்வை காரணமாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இவை எல்லாம் தமிழகத்தில் வேளாண் துறையை முன்னோக்கி அழைத்துச்செல்லும் முதல்வரின் பெரும் நடவடிக்கை ஆகும்.

The post மனம் குளிர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: