×

பதிவுச்சான்று விதிகளை மீறி ஆம்னி பேருந்துகளை மாற்றம் செய்து இயக்கினால் 6 மாதம் சிறை, அபராதம் : தமிழக அரசு அதிரடி!!

சென்னை : பதிவுச் சான்று விதிகளை மீறி ஆம்னி பேருந்துகளை மாற்றம் செய்து இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஆணையரகத்தில் ஆம்னிப் பேருந்துகள் பதிவுச் சான்றிற்கு புறம்பாக வாகனத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு  இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக வாகனத்தின் நீளம், அகலம், உயரம், எடை,  இருக்கை,  படுக்கை அமைப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை மற்றும் பல மாற்றங்கள் குறித்தான புகார்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன.
       
எனவே, ஆம்னிப் பேருந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் ஆம்னிப் பேருந்துகளை புதிய பதிவு  மற்றும் மறு பதிவு செய்த பொழுது, பதிவுச் சான்றில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே வாகனத்தினை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.இதனை  மீறி மாற்றங்கள் செய்து இயக்கினால் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 52 மற்றும் பிரிவு 182(ஹ) (4)-ன் கீழ் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது ஒவ்வொரு மாற்றத்திற்கும் ரூ.5000/-அபராதமாகவோ அல்லது சிறை தண்டனை மற்றும் அபராதமும் ஆகியன இணைந்தும் விதிக்கப்படும். மேலும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 207 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி எண் 421-ன் படி வாகனம் சிறைபிடிக்கப்படும் எனவும் இதன் மூலம்  எச்சரிக்கப்படுகின்றது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Tags : தமிழக அரசு
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...