×

சென்னையில் வெள்ளநீர் தேக்கத்துக்கு மெட்ரோ ரயில் பணிகளும் ஒரு காரணம்

சிறப்பு செய்தி

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது. விடிய விடிய விடாது கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகள் பலவற்றில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் ஆள் உயரத்துக்கு மழைநீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, தற்போது சென்னை முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியது. மழைநீரை வெளியேற்றக்கூடிய அடையாறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கெனால் ஆகியவற்றில் உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதால், மழைநீர் வடிகால்கள் மூலம் சென்ற தண்ணீரை உள்வாங்க முடியவில்லை. இதனால் ஆங்காங்கே தேங்கியது.

அடுத்ததாக, கடல் நீர்மட்டமும் சென்னையின் நீர்மட்டமும் சமதளத்தில் இருப்பதால் வெள்ளநீர் வேகமாக வெளியேற வழியும் இல்லை. மேலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறைப்படுத்தப்படாதது, சதுப்பு நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனது. முக்கியமாக, ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளால் மழைநீர் அதிகளவில் தேங்குவதற்கு குறிப்பிட்ட காரணமாக உள்ளது. இப்படி சென்னையில் மழைநீர் தேங்கியதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கி கொண்டே போனாலும், தற்போது பெய்த மழைநீர் வெளியேறாததற்கான காரணங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அதில், சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்ட பணிகள் வேகமாக முடியாததும் ஒரு காரணம் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், சாலைகளை அகழ்ந்தெடுத்தது, முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு அதன் மூலம் தோன்றிய மெகா பள்ளங்கள், சாலைகளில் வைக்கப்பட்ட தடுப்புகள் போன்றவைகளால் வெளியேற வேண்டிய மழைநீர் அப்படியே தேங்கியதற்கு காரணமாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது மெட்ரோ திட்ட பணிகள் கொண்டுவரப்பட்டது. 2009ல் உயர்மட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து 2012ல் அண்ணாசாலையில் சுரங்க பணிகள் தொடங்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் திமுக ஆட்சி காலத்தில் மின்னல் வேகத்தில் நடைபெற்று வந்தது. அப்போது கலைஞர் முதல்வராகவும், ஒன்றிய அரசில் பிரதமராக மன்மோகன் சிங்கும் இருந்தனர். இதனால் வேகமாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு வழித் தடத்தில் தற்போது விம்கோ நகர் முதல் ஆலந்தூர் வரையும் அண்ணாசாலை வழியாகவும், மற்றொரு வழித்தடமாக சென்ட்ரல் முதல் கீழ்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரையும் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பல லட்சம் மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

பின்னர் 2வது கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கு மாறாக மோனோ ரயில் திட்டம் என்ற சாத்தியமில்லாத ஒரு திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். அதற்கும் நிதி எதுவும் ஒதுக்காமல், ‘ஒன்றிய அரசு இப்போது எப்படி திட்டத்தை அறிவித்து அதற்கு நிதி ஒதுக்காமல் உள்ளதோ’ அதே நிலைபாட்டில் ஜெயலலிதா இருந்ததால் அப்போது மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது. மோனோ ரயில் திட்டத்துக்காக ஒருபடி மண்ணை கூட தோண்டாமல் அறிவிப்போடு நிறுத்தி கொண்டது அதிமுக ஆட்சி. இப்படி முடங்கி கிடந்த மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்ட பணிகளை தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து அதன் வளர்ச்சியில் முழு அக்கறை செலுத்தி வருகிறார். அதனால், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் இரண்டாம் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

அதன்படி. 118.9 கி.மீ., நீளத்துக்கு 128 மெட்ரோ ரயில் நிலையங்களை கட்ட ரூ.63 ஆயிரத்து 246 ேகாடி மதிப்பீட்டில் சென்னை முழுவதும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 3 வழித்தடங்களை கொண்ட இந்த திட்டத்தில் மொத்தம் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 48 சுரங்க நிலையங்களும், மீதமுள்ளவை வெளியிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை(ஜெய்கா) பங்களிப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பிடும்படியான விஷயம், ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி வரும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் ‘‘ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை. இதனால் ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசின் சொந்த நிதியிலிருந்து திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதால் பணிகளை வேகப்படுத்த முடியவில்லை. எதற்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில் சுணக்கம் காட்டுகிறது’’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 7 ஆண்டுகளில் அதாவது 2015 முதல் 2022 வரை 15 கோடியே 88 லட்சத்துக்கு 8 ஆயிரத்து 208 பயணிகள் பயணித்துள்ளனர். சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாகவும், போக்குவரத்து நெரிசலுக்கு பெரிய அளவில் தீர்வை ஏற்படுத்தக்கூடியதுமான மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டுவதன் எதிரொலியாகவே மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகள் ஆமை வேகத்தில் கூட அல்லாமல் நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் ரயில்வே பணிகள் முற்றிலும் தடைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 23 இடங்களில் துளையிடும் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு வருகிறது. மேலும், மாடி ரயில்நிலையங்கள் அமைக்கவும், தரைக்கு மேலே ரயில்கள் செல்லவும் ஆங்காங்கே சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டும், பாலங்கள் கட்டப்பட்டும் வருகிறது. ஒன்றிய அரசின் நிதி கிடைக்காமல் இந்த பணிகள் நத்தை வேகத்தில் நடக்கின்றன.

இதனால் மிக்ஜாம் புயலில் பெரு மழைக்கு, 128 இடங்களில் ரயில்நிலையங்கள் கட்டுவதற்காக 128 முக்கிய சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள், அவற்றின் அருகே ஏற்படுத்திய தடுப்புகள், தூண்கள் அமைப்பதற்கான தடுப்புகள் ஆகியவையே பெரிய அளவில் மழைநீர் சாலைகளில் தேங்க காரணமாக அமைந்து விட்டது. இதனால் 36 மணி நேரம் பெய்த மழைநீர் வடியாமல் தேங்கி நின்று விட்டது என்று தற்போது தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசு முறையாக நிதி ஒதுக்கியிருந்தால் இந்த திட்ட பணிகள் மின்னல் வேகத்தில் முடிந்திருக்கும். பெரிய அளவிலான பள்ளங்கள் இருந்திருக்காது. சாலைகளில் தடுப்புகள் அகற்றப்பட்டிருக்கும். வெள்ள நீரும் தேங்காமல் வேகமாக வெளியேறி இருக்கும். ஆனால் ஒன்றிய அரசின் இந்த அலட்சிய போக்காமல் சென்னை முழுவதும் மெட்ேரா ரயில் திட்ட பணிகளால் ஏற்பட்ட பள்ளங்கள், அகழ்ந்தெடுக்கப்பட்ட சாலைகளின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்தது. அதை அகற்றுவதற்கு பெரிய அளவில் போராட வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டதாக தமிழ்நாடு அரசு எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது இத்திட்ட பணிகளை வேகப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு உரிய நிதியை ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* வெறும் அறிவிப்பு மட்டும் தான்

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்றிய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் வெறும் அறிவிப்போடே நிற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதில் குறிப்பிடும்படியாக சொன்னால், எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்பதும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. கோவையில் ஆயுத தொழிற்சாலை, மகேந்திரகிரி ராக்கெட் ஏவுதளம் என பல முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் அப்படியே நிற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ரயில்ேவ திட்டங்களிலும் நம்மை பெரிய அளவில் ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

* ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் மின்னல் வேகத்தில் நடக்க வேண்டிய பணிகள் நத்தையாக நகரும் நிலை

* சென்னையில் 118.9 கி.மீ. தூரத்துக்கு 128 ரயில்நிலையங்களுடன் ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

* அதில் 48 ரயில் நிலையங்கள் பூமிக்கடியிலும், 80 மாடி ரயில்நிலையங்களாகவும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் வெள்ளநீர் தேக்கத்துக்கு மெட்ரோ ரயில் பணிகளும் ஒரு காரணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,MIKJAM ,Vitiya ,Metro Rail ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...