×

12ம் தேதியே வானிலை மையம் அறிவித்திருந்தால் 17ம் தேதி காசி தமிழ் சங்க ரயிலை பிரதமர் மோடி துவக்கியது எப்படி? நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி கேள்வி

மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 4 மாவட்ட மழை வெள்ளம் குறித்து கடந்த 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். அப்படியானால் 17ம் தேதி மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் காசி தமிழ்ச்சங்க ரயிலின் துவக்க விழாவை பிரதமர் மோடி காணொளி மூலம் நடத்தி வைத்தாரே எப்படி? கொட்டும் பேய் மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?

அன்றைய தினம் கடும் மழையால் தென்மாவட்டங்களில் பல ரயில்களை ரத்து செய்ய முடியாமல் போனதற்கு இந்த விழாவே காரணம் என ரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவு பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஸ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?

தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரதமரா? அல்லது என்னவானாலும் என்ன… தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா? நிதியமைச்சரே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசை திருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப் பெறுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post 12ம் தேதியே வானிலை மையம் அறிவித்திருந்தால் 17ம் தேதி காசி தமிழ் சங்க ரயிலை பிரதமர் மோடி துவக்கியது எப்படி? நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Modi ,Kashi ,Tamil ,Sangh ,Madurai ,Nirmala Sitharaman ,S. Venkatesan ,
× RELATED வானிலை ஆய்வு மையம் தகவல் வங்கக்கடலில் நாளை காற்றழுத்தம் உருவாகும்