×

தகவல் தனியுரிமை விதிமீறல் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.10,800 கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியன் அதிரடி

லண்டன்: ஐரோப்பிய பயனர்களின் தகவல்களை அமெரிக்காவுக்கு மாற்றியதால் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு சுமார் ரூ.10,800 கோடி அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது பயனாளர்களின் தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் உள்ள சர்வர்களுக்கு மாற்றுவதாகவும், இதனால் ஐரோப்பியர்களை அமெரிக்கா உளவு பார்க்கும் அபாயம் இருப்பதாகவும் கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

சுமார் 10 ஆண்டாக நடந்த இந்த வழக்கில் ஐரோப்பிய யூனியன் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. தகவல் தனியுரிமை விதிகளை மீறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு ரூ.10,800 கோடி அபராதம் விதித்தது. மேலும், ஐரோப்பிய பயனர்கள் தகவல்களை அமெரிக்காவுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் மெட்டாவின் சேவையில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் கூறி உள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் தகவல் பாதுகாப்பு கொள்கையை கடுமையாக்கிய பிறகு விதிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அபராதம் இது. இதற்கு முன் 2021ல் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.6,800 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மெட்டாவின் இணையதளத்தின்படி, அந்நிறுவனம் 21 தகவல் சேமிப்பு மையங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் அமெரிக்காவில் 17, ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், அயர்லாந்து மற்றும் ஸ்வீடனில் 3, சிங்கப்பூரில் 1 தகவல் சேமிப்பு மையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post தகவல் தனியுரிமை விதிமீறல் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.10,800 கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியன் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Meta ,European Union Action ,London ,Facebook ,US ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை