மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்

நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை இன்று களை கட்டியது. விற்பனைக்கு ஆடுகளை கொண்டு வந்திருந்த வியாபாரிகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்றுச் சென்றனர். தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை புகழ்பெற்ற சந்தையாகும். செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று அதிகாலை முதலே தீபாவளி பண்டிகைக்கான விற்பனை களைக்கட்டியது. தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படும் நிலையில், கறிக்காக ஆடுகளை கொண்டு செல்வோர், மொத்தமாக 8 முதல் 10 ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு இன்று வந்திருந்தனர்.

ஆடுகளை சந்தைக்குள் கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தனர். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என இரு வகை ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், கறிக்காக வெளியூருக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் செம்மறியாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கிராமப்புறங்களில் இருந்து வருவோர் வெள்ளாடுகளை வாங்குவதிலேயே விருப்பம் காட்டினர். ஆட்டின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. கறியின் எடை அதிகரிக்க, அதிகரிக்க விலையும் உயர்ந்து காணப்பட்டது. கறியைப் பொறுத்து ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இயல்பாக ரூ.1 ேகாடி முதல் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகி வரும் நிலையில், இன்று வழக்கத்தை விட கூடுதல் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகளை வாங்கி செல்ல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாது, தேனி, மதுரை, கேரள வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் கால்நடை வளர்ப்ேபார் மினி லாரியில் ஆடுகளை மொத்தமாக சந்தைக்கு கொண்டு வந்தனர். ஆடுகள் விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் 31ம் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்காக உச்சபட்ச வியாபாரம் அடுத்த செவ்வாய்கிழமை நடக்கும் என்றாலும், இவ்வாரமும் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். தீபாவளியை ஒட்டி சந்தையில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், இன்று பலர் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். செம்மறியாடுகளே அதிகம் விலைபோனது’’ என்றனர்.

தீபாவளி அதிரடி ஆபர்
மேலப்பாளையம் ஆட்டுசந்தையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் கோயா ஒரு அதிரடி ஆபரை வெளியிட்டு, விற்பனைக்கு ஆடுகளோடு வந்திருந்தார். அதில் 68 கிலோ எடையுள்ள ஒரு செம்மறி ஆட்டை வாங்கினால், 18 கிலோ எடையுள்ள மற்றுமொரு செம்மறியாடு இலவசம் என அறிவிப்பை வெளியிட்டார். இவ்விரு செம்மறியாடுகளும் சேர்த்து மொத்தம் ரூ.40 ஆயிரம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவரிடம் போட்டி போட்டு வியாபாரிகள் செம்மறியாடுகளை வாங்கி சென்றனர்.

The post மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: