×

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 4,133 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மீதான மானியக் கோரிக்கையின் விவாதங்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்தார். மேலும் 106 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

  • 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.95 கோடியில் நிறுவப்படும்.
  • ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.40.05 கோடியில் நிறுவப்படும்.
  • நாமக்கல், ராணிப்பேட்டை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.118.75 கோடியில், 50 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படும்.
  • 108 அவசர கால ஊர்திகளின் சேவையை வலுப்படுத்த ரூ.21.40 கோடியில் 62 புதிய அவசர கால ஊர்திகள், 13 தாய் சேய் நல ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவ கருவிகள் வழங்கப்படும்.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், தஞ்சாவூர், தருமபுரி, புதுக்கோட்டை, தேனி, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் ஆகிய 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 8.80 கோடியில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கப்படும்.
  • ”தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்” மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4133 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.50 கோடியில் புதிய சி.டி ஸ்கேன் கருவி வழங்கப்படும்.
  • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விஷமுறிவு சிகிச்சைக்கான உபகரணம் வழங்கப்படும். மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஷமுறிவு அவசர சிகிச்சைக்கான மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும். பாம்புக்கடி நஞ்சுமுறிவு சிகிச்சைக்கான பயிற்சிகள் மாநில அளவில் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதோடு, அனைத்து கிராமங்களிலும் தன்னார்வலர்களுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு புதிய சி-ஆர்ம் கருவிகள் ரூ.40 லட்சத்திலும், திண்டுக்கல் மாவட்டம் – பழநி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ரூ.1 கோடியிலும் வழங்கப்படும்.
  • அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவைகள் ரூ.185.24 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • 50 வட்டாரங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் ரூ.40.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கோவில்பட்டி, காஞ்சிபுரம், பாலக்கோடு, கோபிசெட்டிபாளையம், சீர்காழி, மன்னார்குடி, வேதாரண்யம் மற்றும் குன்னூர் ஆகிய 8 அரசு மருத்துவமனைகளில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் ரூ.10 கோடியில் நிறுவப்படும்.
  • “மக்கள் நலவாழ்வு குழு” ஏற்படுத்தப்படும்.
  • மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு இருதய பாதுகாப்பு மருந்துகள் ரூ. 3.37 கோடியில் வழங்கப்படும்.

மருத்துவக் கட்டமைப்புகள்

  • அணைக்கட்டு, திருக்கழுக்குன்றம், சோளிங்கர், தண்டராம்பட்டு, ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி ஆகிய 28 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ. 161.20 கோடியில் நிறுவப்படும்.
  • சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ. 146.52 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
  • சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 64.90 கோடி மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதி கட்டப்படும்.
  • சென்னை எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடம் ரூ. 53 கோடியில் அமைக்கப்படும்.
  • சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவிலியர் பயிற்சிப்பள்ளி கட்டடம் ரூ. 35.15 கோடியில் அமைக்கப்படும்.
  • மன்னார்குடி அரசுத் தலைமை மருத்துவமனை, தேன்கனிகோட்டை மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் தலா ரூ.9 கோடி வீதம் ரூ. 27 கோடியில் கட்டப்படும்.
  • மதுரை, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருந்து கிடங்குகளுக்கு கூடுதலாக 3 புதிய கிடங்குகள் ரூ. 18 கோடியில் நிறுவப்படும்.
  • அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய ”எம்.ஆர்.ஐ. ஸ்கேன்” ரூ. 17 கோடியில் நிறுவப்படும்.
  • சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ரூ. 5.09 கோடியில் அமைக்கப்படும்.
  • கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.

புற்றுநோய் மருத்துவ சேவைகள்

  • காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ரூ.32 கோடியில் வழங்கப்படும்.
  • புற்றுநோய் கீமோதெரபி மருந்துகளுக்கு கூடுதலாக ரூ. 10 கோடி வழங்கப்படும்.
  • மதுரை, பாலரெங்காபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை புதிய உட்கட்டமைப்பு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு வசதியுடன் ரூ. 4.61 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் ரூ. 3.31 கோடியில் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற நலவாழ்வு

  • 38 மாவட்டங்களில் 200 புதிய நகர்புற துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான கட்டடங்கள் ரூ. 80 கோடியில் அமைக்கப்படும்.
    வளரிளம் பருவத்தினருக்கான சேவைகள்
  • அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முகாம் என்ற அளவில் 10 முதல் 19 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
  • வளரிளம் பருவத்தினருக்கான நலவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி சுகாதார தூதுவர்களுக்கான பயிற்சியும், வளரிளம் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார பயிற்சி கையேடு மற்றும் இதர பொருட்களும் வழங்கப்படும்.

மனநல மருத்துவ சேவைகள்

  • போதை மீட்பு சேவைகள் அதிகமாக தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து உரிய மனநல ஆலோசனை, மருத்துவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகள் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் கிடைத்திடும் வகையில் கட்டமைப்புகள் ரூ. 5 கோடியில் வலுப்படுத்தப்படும்.
  • பின்பேறு கால தாய்மார்களுக்கான தாய்-சேய் மனநல சேவைகள் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்து வழங்கப்படும்.
  • மாநில அளவிலான ”தமிழ்நாடு மனநல மருத்துவ கருத்தரங்கு” நடத்தப்படும். பார்வையிழப்பு தடுப்பு சேவைகள்:
  • சென்னை எழும்பூர் கண் மருத்துவவியல் நிலையத்திற்கு” ரூ. 8 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
  • திருநெல்வேலி, காரைக்குடி மற்றும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 3.25 கோடியில் கண் சிகிச்சைக்கான தனிப்பிரிவு சீரமைக்கப்பட்டு, நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
  • தாம்பரம் மற்றும் திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைகளில் புதியதாக கண் வங்கி நிறுவப்படும் மற்றும் மாநில அளவில் கண் மருத்துவ சேவைகளை கண்காணிக்க புதிதாக ‘கண் மருத்துவ மேலாண்மை செயலி’ உருவாக்கப்படும்.
  • மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ஆகிய 4 மருத்துவமனைகளில் கட்டடம் மற்றும் உபகரணங்களுடன் கூடிய பன்னோக்கு பல் மருத்துவ நிலையம் அமைக்கப்படும்.
  • மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஹீமோகுளோபினோபதி நோய்க்கான உயிர் காக்கும் உயர்ரக மருந்துகள் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • காசநோய் பரிசோதனைக்கான நுகர்பொருட்கள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் வழங்கி, அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காசநோய் சேவைகள் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக குழந்தைப் பருவ நீரிழிவு நோய்க்கான மாநில அளவிலான பதிவேடு உருவாக்கப்படும்.
  • சென்னை அரசு இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவியெலும்பு அறுவை திறன் ஆய்வகம் ரூ. 2.40 கோடியில் நிறுவப்படும்.
  • சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறார்களுக்கான காக்லியர் உள்வைப்பு எனும் சிறப்பு அறுவை சிகிச்சைக்கான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டிற்குள் ரூபெல்லா தட்டம்மை நீக்குதல் என்ற இலக்கை குறைந்தபட்சம் 50 விழுக்காடு மாவட்டங்களில் நிறைவேற்றப்படும்.
  • 100 இந்திய மருத்துவமுறை மருந்தகங்கள் ரூ. 12.98 கோடியில் ஆயுஷ் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
  • தேசிய எலும்பு-தசை சிதைவு நோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டம், 50 சித்த மருத்துவப் பிரிவுகளில் ரூ. 4.50 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • மலைவாழ் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் 10 பகுதிகளில் ”நடமாடும் சித்த மருந்தகங்கள்” ரூ.94.25 லட்சத்தில் தொடங்கப்படும்.
  • ஆயுஷ் மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ ஆலோசகர்களின் ”திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிப் பட்டறை“ நடத்தப்படும்.
  • சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்ட உணவுப் பகுப்பாய்வு ஆய்வகங்களில் நுண்ணுயிரியல் பிரிவு ரூ. 18 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் ரூ. 8.85 கோடியில் ஐந்து உணவுப் பகுப்பாய்வு ஆய்வகங்களின் இரசாயனப் பிரிவு மேம்படுத்தப்படும்.
  • உணவு மாதிரிகளில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிசோதிப்பதற்காக கோயம்புத்தூரில் உள்ள உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தில் ரூ. 4.50 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் தற்போது 36 மருத்துவக் கல்லூரி மற்றும் அதனை சார்ந்த மருத்துவமனைகளுடன் இயங்கி வருகிறது. மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மருத்துவக்கல்வி இயக்ககம் “மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்“ என்ற பெயரில் செயல்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துகள் கட்டுப்பாட்டிற்கான புதிய மண்டலம் உருவாக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக ”பன்னாட்டு மருத்துவ மாநாடு” நடத்தப்படும். மேலும், நடப்பாண்டின் பொது சுகாதார வருடாந்திர மாநாட்டின் போது 100 திறனாய்வு கட்டுரைகள் வெளியிடப்படும்.
  • தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை வாகனங்களின் பராமரிப்பினை மேம்படுத்தும் வகையில் பூவிருந்தமல்லி, திருப்பத்தூர். கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திருப்பூர், கரூர் மற்றும் சிவகாசி ஆகிய 7 இடங்களில் கூடுதலாக புதிய சிறு பணிமனைகள் தொடங்கப்படும்.
  • ”தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்” மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4133 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.
  • சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ. 15 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும். 105. “நடப்போம் நலம் பெறுவோம்” எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பேணுவதற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும்.

பச்சிளங்குழந்தை பராமரிப்பு சேவைகள்:

  • இல்லங்களிலேயே இளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு சேவைகள்” செயல்படுத்தப்படும்.
  • சென்னை அரசு தாய்சேய் நல மருத்துவமனை மற்றும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு பச்சிளங் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு ரூ. 2.4 கோடியில் 16 வென்டிலேட்டர் கருவிகள், சென்னையிலுள்ள அரசு குழந்தை நல மருத்துவமனை மற்றும் அரசு தாய்சேய் நல மருத்துவமனை, திருச்சி, கோயம்புத்தூர்,5 தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 1.56 கோடியில் 6 உயர் ரக அதிநவீன பச்சிளங்குழந்தை வென்டிலேட்டர் கருவிகள் மற்றும் 75 சிறப்பு பச்சிளங் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு ரூ. 1.50 கோடியில் 150 ஆக்ஸிஜன் பிளெண்டர் கருவிகள் வழங்கப்படும்.
  • 75 சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பிரிவுகளுக்கு உயிர்காக்கும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ரூ. 4.76 கோடியில் வழங்கப்படும்.
  • குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு இரத்தசோகை கண்டறியும் வகையில் 820 ஹீமோகுளோபினோமீட்டர் கருவிகள் ரூ. 3.94 கோடியில் வழங்கப்படும்.
  • திருச்சி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலுள்ள பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களில் குழந்தையுடன் தாயையும் உடன் அனுமதித்து கவனிக்கும் வகையில் 20 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் பச்சிளங் குழந்தை சிறப்பு கவனிப்பு பிரிவு ரூ. 3.44 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • வேலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வெவ்வேறு மருத்துவ நிலையங்களிலிருந்து உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் பச்சிளங்குழந்தைகளின் தேவையை கருதி ரூ. 1.34 கோடியில் கூடுதல் சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பிரிவுகள் அமைக்கப்படும். மேலும் கோயம்புத்தூர் மாவட்டம்-மேட்டுப்பாளையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-திருவரங்கம் அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் புதியதாக நிறுவப்பட்டு உள்ள 3 சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் ரூ. 1.57கோடியில் வழங்கப்படும்.
  • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், தென்காசி மற்றும் வாலாஜா ஆகிய 4 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் செயல்படும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையத்திற்கு ரூ. 1.40 கோடியில் உபகரணங்களும், 39 மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையங்கள் மற்றும் 8 மண்டல பயிற்சி மையங்களுக்கு ரூ. 11.75 லட்சத்தில் இளம் சிசு வளர்ச்சி கண்காணிப்பு உபகரணங்களும் வழங்கப்படும்.
  • அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 27 தாய்ப்பால் வங்கிகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.
  • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம், திருப்பத்தூர், தென்காசி, வாலாஜாபேட்டை ஆகிய 4 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையங்களில் ”ஒருங்கிணைந்த உணர்வுத் திறன் பூங்கா” அமைக்கப்படும்.
  • சென்னையில் சைதாப்பேட்டை, செனாய் நகர், பெருமாள்பேட்டை மற்றும் அடையாறு ஆகிய 4 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் புதிய பச்சிளம் குழந்தை நிலைப்படுத்துதல் பிரிவு ஏற்படுத்தப்படும்.
  • ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.40.05 கோடியில் நிறுவப்படும்.
  • சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், தஞ்சாவூர், தருமபுரி, புதுக்கோட்டை, தேனி, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் ஆகிய 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.8.80 கோடியில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கப்படும்.

மகப்பேறு மருத்துவ சேவைகள்:

  • கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்திடும் வகையில் தற்போது செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென்பொருள் தரம் உயர்த்தி மறுசீரமைக்கப்படும்.
  • பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கிற்கான சிகிச்சைக்கு நவீன உபகரணங்கள் 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 42 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 2.98 கோடியில் வழங்கப்படும்.
  • அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய 13 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 6 படுக்கைகள் கொண்ட பிரத்யேக மகப்பேறு தீவிர சிகிச்சை / உயர் சார்பு பிரிவுகள் ரூ. 6.88 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • திருவாரூர் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு புதிய கட்டடம் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும்.
  • லக்ஷ்யா திட்டத்தின் கீழ் 188 மகப்பேறு அறைகள் ரூபாய் 6.08 கோடியில் வலுப்படுத்தப்படும்.

The post மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 4,133 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Medical Staff Selection Commission ,Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu Medical Staff Selection Commission ,M.Subramanian ,Dinakaran ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...