×

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!

நமது பண்பாட்டில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு. ‘‘மாதா, பிதா குரு தெய்வம்’’. இது உபநிடதத்திலும் வருகிறது. மாத்ரு தேவோபவ பித்ரு தேவோ பவ; ஆச்சார்ய தேவோ பவ “மாதா, பிதா, குரு தெய்வம்” என்பதை பல்வேறு கோணங்களில் காணலாம். மாதா பிதாவைக் காட்ட, பிதா குருவைக் காட்ட, குரு தெய்வத்தைக் காட்டுகிறார் என்பது ஒரு கோணம்.

மாதாதான் தெய்வம். பிதாதான் தெய்வம். குருதான் தெய்வம் என்பது இன்னொரு கோணம். தெய்வம்தான் ஒருவருக்கு தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் இருக்கிறார் என்பது மூன்றாவது கோணம். பொதுவாக ஒருவருக்கு மாதா அதாவது அன்னை தான் முதல் தெய்வம். அடுத்து பிதா அதாவது தந்தை தெய்வம்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”

என்பது ஆன்றோர் வாக்கு. தெய்வம் என்பது நம்பிக்கை தான். ‘‘நீ என் குழந்தை” என்று தாயார் சொன்னால்தான் உண்டு. அவள் தான் தந்தையையும் காட்டுகிறாள். அம்மா உண்மை (truth) அப்பா நம்பிக்கை(faith) என்றெல்லாம் சொல்வார்கள். தெய்வம், தான் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால், தாயைப் படைத்தான் என்பார்கள்.

நமது சமய மரபில், தாய் தந்தைக்குப் பின்தான் தெய்வம் வருகிறது. படைப்பாளிக்கு(creator) தெய்வம் என்ற பெயர் உண்டு. நம்மைப் படைத்ததால் பெற்றோர்களுக்கும் “தெய்வம்” என்று பெருமை உண்டு. ஒருவன் தன் தாய் தந்தையை புறக்கணித்துவிட்டு என்னதான் தான தர்மம் செய்தாலும். தான தர்மத்தின் அத்தனை புண்ணியத்தையும். தாய் தந்தை கவனிக்காத அல்லது அலட்சியப்படுத்திய பாவம் ஒன்றும் இல்லாமல் செய்து விடும்.

தாய் தந்தையைக் காட்ட, தந்தை நல்ல குருவிடம் சேர்க்க, குரு தெய்வத்தைக் காட்டுகிறார். சில நேரங்களில் தாயே குருவாக, தந்தையே குருவாக அமைந்துவிடுவதும் உண்டு. தாய் தந்தையருக்கு ஒருவன் செய்யும் பணிவிடை குறித்து பல கதைகள் புராணங்களிலும் சமய இலக்கியங்களிலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பெற்ற தாய் தந்தையர் மனம் குளிர வேண்டும். ஒரு நல்ல ஒழுக்கமுள்ள குழந்தையைப் பெற்று விட்டால், அவர்களுக்கு ஏழு பிறவியிலும் தீ வினைப் பயனாகிய துன்பங்கள் சேராது என்கிறார் வள்ளுவர்.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

குழந்தைகள் பண்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். உத்தியோகத்தில் சிறந்த குழந்தையோ, செல்வத்தில் சிறந்த குழந்தையோ உருவாக்கி விடலாம். அதனால் பெரும் பயன் எதுவும் அக்குழந்தைக்கோ, பெற்றோர்களுக்கோ கிடைத்து விடாது. பண்பு உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

என்பது வள்ளுவர் வாக்குதான்.

பண்புடையவர்கள் இருப்பதால் உலகம் இருக்கிறது; அது இல்லாவிடின் மண்ணுள் மறைந்து அழிந்துவிடும் என்பது பாடலின் பொருள். உலகத்தோடு ஒத்துப் பொருந்தி வாழும் பண்புகளால் மனித உறவுகள் பலப்படுத்தப்பட்டு, மண்ணும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை புறநானூற்றுப் பாடல் ஒன்றும் கூறியது. பண்புடைமைக்கு சங்ககால விளக்கமாகக் காட்டப்படும் அப்பாடல்:

உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், `இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே (புறநானூறு 182)

குழந்தைகளை பண்பு உள்ளவர்களாக வாழ வழிகாட்டத்தான் இத்தனை நீதி நூல்கள் சாஸ்திரங்கள். தொழில்நுட்பம் அறிவை வளர்க்கும்.பண்பை வளர்க்காது. பெரியோர்களுடைய பொன்மொழிகள் எல்லாவற்றையும் நாம் படிக்கிறோம். நல்லவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வாழ்கிறோம். ஒரு தந்தை தன் மகனுக்கு என்ன உதவி செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு வள்ளுவர் மிக அழகாக பதில் தருகிறார்.

நன்கு படிக்க வைக்க வேண்டும். சிறந்த ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். மகனின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர உதவ வேண்டும். உலகம் புகழும் படியான உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும். இதெல்லாம் தந்தை தன் மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

எந்தத் துறையில் பிள்ளைகள் விருப்புடன் இருக்கிறார்களோ அதில் ஈடுபாடு உண்டாகச் செய்து, அவர்களிடம் மறைந்துள்ள பெரும் ஆற்றல்களை வளர்த்து, வெளிக்கொணர்ந்து, எழும் சவால்களை எதிர்கொண்டு, வெல்லும் திறன் வளர தந்தை உதவி செய்தல் என்பதுதான் ‘முந்தி யிருப்பச் செயல்’. ஒரு தாய் தந்தையர்க்கு எது மகிழ்ச்சியளிக்கும்?. எது பெருமகிழ்ச்சியளிக்கும்?

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

ஒரு குழந்தை பிறப்பது தாய்க்கும் தந்தைக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த குழந்தை “நல்லவன்” “வல்லவன்” “சான்றோன்” என்று உலகத்தாரால் பாராட்டப்படும் பொழுது அந்த மகிழ்ச்சிக்கு இணை ஏது? சால்பின் அடிப்படையில் வருவது சான்றோன் என்னும் சொல். சால்பு என்பது நிறைவு என்னும் பொருள் தருவது. சான்றோன் என்பதற்கு நிறைந்தவன் என்பது நேர்பொருள்.

எதில் நிறைந்தவன் அவன்? சான்றோன் என்பதில் கல்வி, ஒழுக்கம், பண்பாடு அனைத்தும் அடங்கும் என்றாலும் அது பண்பின் நிறைவுபற்றியே பெரிதும் குறிக்கும். சான்றோன் என்ற சொல் பொதுவாக நல்ல குணங்களாலும் செய்கைகளாலும் நிறைந்தவன் எனப் பொருள்படும். சரி, இப்படி வளர்ந்த பிள்ளை, பெற்றோர்க்கு என்ன பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்பதையும் ஒரு குறட்பாவிலே சொல்லிவிட்டார்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

இப்படிப்பட்ட பிள்ளையைப் பெறுவதற்கு இவனுடைய பெற்றோர்கள் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் என்று உலகத்தவர் பாராட்டும்படியான ஒரு சூழலை, தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக உருவாக்க வேண்டும். தந்தை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பயனாய் விளைந்தது மகன் உல கோர் பாராட்டும் உயர்ந்த நிலை அடைந்தது.

தந்தைக்கு நற்சொல்லையுண்டாக்குதல் என்பது மகன் செய்யும் கைம் மாறு என்று சொன்னால், அது பெற்றவனுக்குப் பழிப்பெயரைப் பெற்றுத் தரலாமாதலால் அதை உதவி என்றார் வள்ளுவர். திருக்குறள் போன்ற உன்னத நூல்கள், ஒரு பெற்றோராகவும், பெற் றோருக்குப்பிள்ளையாகவும், உலகத்தில் நல்ல மனிதநேயம் மிக்கவர்களாக எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதை வழிகாட்டுகின்றன

இத்தனை விஷயத்தையும் ஒரு அழகான திரைப்படப்பாடலில் வாலி அழகாக உணர்ச்சிமயமாகக் கொடுத்திருக்கிறார்.

பத்துத் திங்கள் சுமந்தாளே அவள்
பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காகதனி
இடமும் தரவேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழவேண்டும்

ஒரு பிள்ளை இப்படி வாழ்ந்தால் எப்படியிருக்கும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Fatha ,Matru Devobawa ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்