×

இடுக்கியில் தடையை மீறி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம்: தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: இடுக்கி சாந்தன்பாறையில் தடையை மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கட்டப்பட்டதை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள சாந்தன்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கட்டும் பணிகள் கடந்த வருடம் தொடங்கியது. ஆனால் அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது என்று கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கட்டிடம் கட்டும் பணியை நிறுத்தி வைக்க இடுக்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அதை மீறி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து கட்டிடப் பணிகளை நிறுத்தி வைக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நேற்று முன்தினம் இரவோடு இரவாக பெரும்பாலான கட்டிடப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த விவரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் முகம்மது முஷ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மீது நேற்று தாமாகவே முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்தது. அரசியல் கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பதா என்று கண்டித்த டிவிஷன் பெஞ்ச், மறு உத்தரவு வரும் வரை கட்சிக் கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்தது.

The post இடுக்கியில் தடையை மீறி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம்: தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது கேரள உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Marxist party ,Idukki ,Kerala High Court ,Thiruvananthapuram ,Marxist Communist Party ,
× RELATED கேரள கூட்டுறவு வங்கி ஊழல்;...