×

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஊராட்சி செயலாளருக்கு சிறை

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராம்குமார் (30). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகின்றார். வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம் பெண், பூசிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது, ராஜ்குமாருக்கும் அப்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பெண்ணிடம் செல்போனில் பேசிய ராம்குமார் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். பின்னர், அவர்கள் சினிமா, கடற்கரை, போன்ற பல இடங்களில் சுற்றி திரிந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அப்பெண் கர்ப்பமானார். இதையடுத்து, ராம்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அவர் வலியுறுத்தி வந்தார். ஆனால், ராம்குமார் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி குற்றவாளியான ராம்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் ராம்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஊராட்சி செயலாளருக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : panchayat ,Chengalpattu ,Mani ,Pusivakkam Mettu Street ,Walajabad ,Kanchipuram district ,Ramkumar ,
× RELATED பீஸ் கேரியரை தரக்கோரி பீடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை