×

திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் ஒருதலைக் காதலியின் தந்தை சுட்டுக் கொலை: ரயில் முன் பாய்ந்து கான்ஸ்டபிள் காதலன் தற்கொலை

இந்தூர்: திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் ஒருதலைக் காதலியின் தந்தையை காதலன் சுட்டுக் கொன்றார். பின்னர் ரயில் முன் பாய்ந்து காதலன் கான்ஸ்டபிள் தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் பெர்ச்சா கிராமம் வழியாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடந்தது. சம்பவ இடத்தில் நாட்டுத் துப்பாக்கி, பைக் உள்ளிட்டவையும் இருந்தன.

தகவலறிந்த போலீசார், தண்டவாளத்தில் உடல் சிதறிக் கிடந்த சடலத்தை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி பவிஷ்யா பாஸ்கர் கூறுகையில், ‘தேவாஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்தார். அந்தப் பெண்ணை கான்ஸ்டபிள் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அந்த பெண், கான்ஸ்டபிளை திருமணம் செய்து ெகாள்ள விரும்பவில்லை. பெண்ணின் தந்தையும் அதற்கு தடையாக இருந்தார். அவர், வேறொருவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள், சம்பவம் நடந்த நாளன்று அதிகாலை 1 மணியளவில் தனது காதலியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காதலியின் தந்தையை சரமாரியாக சுட்டார். சம்பவ இடத்திலேயே 55 வயதுடைய அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்த காதலிக்கும் காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய கான்ஸ்டபிள், அங்கிருந்து வெளியேறினார். தனது பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக சென்ற அவர், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு செய்த துரோகத்திற்காக, கொலை செய்தேன்’ என்று தலைப்பிட்டு, தனது காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

பின்னர் ஷாஜாபூர் மாவட்டம் பெர்ச்சா கிராமம் வழியாக செல்லும் ரயில்வே பாதையில் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்தில் கைத்துப்பாக்கி, அவரது பைக் மீட்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் ஒருதலைக் காதலியின் தந்தை சுட்டுக் கொலை: ரயில் முன் பாய்ந்து கான்ஸ்டபிள் காதலன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Indore ,
× RELATED காதலியின் இறுதி சடங்கிற்கு பணமில்லை...