×

மரக்காலால் நெல்மணியளந்த பெருமாள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எந்த ஊரில் கோயில் இருக்கிறதோ, அங்கு வளம் நிறையும், ஆன்மிக உணர்வால் மக்களிடையே நேசம் பெருகும் என்பது நம்பிக்கை. அப்படி ஆலயம் இருந்த ஊர்கள் செழிப்பாக விளங்குவதைப் பார்த்து, தம் ஊரிலும் அத்தகைய ஓர் ஆலயம் அமையவேண்டும் என்று விரும்பினான், சாளுக்கிய மன்னன் ஒருவன். சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வாறு விரும்பிய அந்த மன்னன், கோயில் நிர்மாணிக்கத் தேர்ந்தெடுத்தது தேவதானம் என்ற ஊரை.

ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தின் வளமும் வளர்ச்சியும் அவன் கவனத்தை ஈர்த்தன. அதேபோன்ற ரங்கநாதரை, இங்கு பிரதிஷ்டை செய்து கோயிலை உருவாக்கினான். தான் மட்டுமின்றி தன்னுடைய குடிமக்களும் எல்லா சிறப்புகளையும் எய்த வேண்டும் என்ற நல்நோக்குடைய அந்த மன்னன், கொஞ்சம் பேராசையும் கொண்டவனாக இருந்தான். ஆமாம், ஸ்ரீரங்கத்துப் பெருமாளைவிட அதிக நீளமுடையவராகத் தன் ஊர் பெருமாளை உருவாக்கினான்.

அந்த கோயிலுக்குள் செல்வோமா?

நெடிதுயர்ந்து அழகிய ராஜகோபுரம். அதற்குள் நுழைவதற்கு முன்னால் கோயிலின் வெளியே, இடதுபுறம், ஒரு பெரிய அரசமரம். அதன் கீழே விநாயகர். இவரை தரிசித்துவிட்டு உள்ளே நுழைந்தால், பலிபீடம், துவஜஸ்தம்பம், அருகே மூலவர் சந்நதியைப் பார்த்தபடி கருடாழ்வார். வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது தல விருட்சமான பாரிஜாத மரத்தைப் பார்க்கலாம். சுமார் பத்தடி உயரத்தில் இருக்கும் இவ்விருட்சம், கொஞ்சமும் உயரம் கூடவில்லை என்கிறார்கள். இதிலிருந்து ஒடித்து வேறு இடங்களில் வைக்கப்பட்ட கிளைகள், பெரிய மரங்களாகி தாய் மரத்தைவிட உயர்ந்து வளரும் அதிசயம் இங்கே நிகழ்ந்திருக்கிறது!

தாய் மரத்தின் அடியில் நாகராஜர். இவரை வணங்கிவிட்டு மேற்கு நோக்கி நகர்ந்தால், ரங்க நாயகி தாயார் தனி சந்நதியில் அழகு மிளிர அருட்காட்சி தருகிறார். இவரை வலம் வந்து கோயில் மூலவருக்கு நேர் பின்னால் போனால், சக்கரத்தாழ்வார் சந்நதி. வழக்கம்போல சக்கரத்தாழ்வார் சிலையின் பின் பகுதியில் யோக நரசிம்மர். இவரையும் வலம் வந்து வடக்கு நோக்கிச் சென்றால், ஆண்டாள் தனி சந்நதியில் பக்தர்களை எதிர்கொண்டழைக்கிறாள்.

அன்னையைத் தரிசனம் செய்துவிட்டு, நகர்ந்தால் எதிரே பக்த ஆஞ்சநேயர். இவரிடமிருந்தும் அருளாசி பெற்றுக் கொண்டு கொடிமரத்தைச் சுற்றியபடி கருவறை மண்டபத்திற்குள் நுழையலாம். பெருமாளின் அனந்தசயன கோலம், மண்டப முகப் பிலேயே வாசலுக்கு மேலே சுதை சிற்பமாக அழகுற காட்சியளிக்கிறது. கருவறைக்குள் பள்ளி கொண்டிருக்கும் இந்த பெருமாள், பதினெட்டரை அடி நீளம். ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்கும் இந்த பிரமாண்ட விக்ரகத்தின் உயரம் ஐந்தடி. முற்றிலும் சாளகிராமக் கல்லால் வடிக்கப்பட்ட அற்புத, அழகிய உருவம். பெருமாளின் நாபிக் கமலத்தில் பிரம்மன்; பெருமாளின் கால்களை தேவியும், பூமாதேவியும் பிடித்துவிட, தும்புரு மகரிஷியும் ஆஞ்சநேயரும் கருவறை சுவர்களில் சிற்பங்களாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்கள்.

சுதாபிம்பம் என்று சொல்லப்படும் சாளகிராமத்தால் செய்யப்பட்ட இந்த மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்படுவதில்லை. வெறும் தைலக் காப்பு மட்டும்தான். அபிஷேகம் எல்லாம் ஸ்ரீதேவி, பூமாதேவி – சக்கரத்தாழ்வார் சமேத உற்சவருக்குதான். பெருமாள் மரக்கால் உருளையைத் தன் தலையணையாக வைத்துக் கொண்டிருக்கிறார். வலதுகையை தலைக்குக் கீழாக மடித்துவைத்த அழகுத் திருக்கோலம்.இந்த மரக்கால் எப்படி வந்தது?

தேவதானத்தை மையமாக வைத்து சுற்றுவட்டாரத்தில் அறுபத்து நான்கு கிராமங்களுக்கு இந்தக் கோயிலே குலதெய்வக் கோயிலாக இருந்திருக்கிறது. கிராமத்து வயல்களில் அறுவடையாகும் நெல்மணிகளை கோயிலுக்குள் இருந்த நெற்களஞ்சியத்தில் சேகரித்து வைப்பது வழக்கம். வறட்சி அல்லது பஞ்ச காலம் என்று வந்தால் அப்போது இந்த சேமிப்பு அத்தனை கிராமங்களுக்கும் பசியாற்றும் என்ற பெருந்தன்மையான சமுதாய நற்பணிதான் இது. ஒரு காலத்தில் மிக அபரிமிதமாக அறுவடை ஆகிவிட்டபோது, பெருமாளே வந்து, தன் கையிலிருந்த மரக்காலால் அந்த நெல்மணிகளை அளந்தாராம். முட்டிக்கால் போட்டு அப்படி அவர் நெடுநேரம் அளந்தபோது, அவர் கால் முட்டி அழுத்தத்தால் ஒரு பெரிய குளமே தோன்றிவிட்டதாம். (கோயிலுக்கு எதிரே காணியம்பாக்கம் பகுதியில் இப்போது காணப்படும் குளம் அதுதான் என்கிறார்கள்.

இந்தக் குளம் அங்கே பிரசன்னீஸ் வரர் என்றழைக்கப்படும் ஈசன் கோயிலைச் சார்ந்து இருப்பதாகவும், இரு கோயில் நிர்வாகமும் ஒரே குழுவினரால் மேற்கொள்ளப்படுவதால் இந்தக் குளம் இரு கோயில்களுக்கும் பொதுவானது என்றும் தெரிவிக்கிறார்கள். (ஸ்ரீரங்கநாதருக்கு என்று தனியே ஒரு தாமரைக் குளமும் இருக்கிறது.) அளந்து, அளந்து பிறகு, சோர்ந்து போய் அந்த மரக்காலையே தலையணையாக வைத்தபடி, பெருமாள் சயனம் கொண்டு விட்டாராம்!

இத்தகைய ரங்கநாதரை உள்ளம் குளிர தரிசனம் செய்துவிட்டு, ராஜகோபுரத்தின் வழியாக வெளியே வந்தால், வலது பக்கத்தில் விநாயகரும் இடது பக்கத்தில் காளிங்க நர்த்தனராக கிருஷ்ணனும் நம்மை அன்புடன் வழியனுப்பி வைக்கிறார்கள். நம்முடைய தேவை என்ன என்பதை இந்த அனந்தசயனனிடம் தெரிவித்துவிட்டால், நாம் ஆனந்தப்படும்படி விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறார் என்பது பக்தர்களின் அனுபவம்.

ஏழு அல்லது ஒன்பது வாரம் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு காரிய சித்தி அடைந்ததும் சில பக்தர்களின் அனுபவம். ஆனால், இவரிடம் சிறிது எச்சரிக்கையாகத்தான் நம் வேண்டுகோளை வைக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது, ‘என் வேண்டு கோளை நிறைவேற்றினால் உனக்கு நான் இன்ன கைம்மாறு செய்கிறேன்,’ என்று பேரம் பேசக்கூடாதாம். நம் தேவையை மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடவேண்டும். விருப்பம் நிறைவேறியவுடன் கோயிலுக்குப் போய் தங்களால் இயன்ற காணிக்கை செலுத்துவதோ அல்லது கோயில் திருப்பணி மேற்கொள்வதோ செய்ய வேண்டும் என்கிறார்கள்.

பெரிதும் பாழடைந்திருந்த இக்கோயில், பக்தர்களின் அரும்பெரும் முயற்சியால் புதுப்பொலிவு கண்டிருக்கிறது. சுற்றிலும் உயரமான மதில்சுவர்களும், புனரமைக்கப்பட்ட வெளிப் பிராகார சந்நதிகளும் புத்தம் புதிய தோற்றம் கொண்டிருக்கின்றன. ஊர்ப் பிரமுகர்கள் இக்கோயில் முறையாகப் பராமரிக்கப்பட உதவுகிறார்கள்.

பரிசாரகரும், அர்ச்சகர்களும் இறைவனுக்கு, அந்தந்த நாட்களில் அலங்காரம், அபிஷேகம், அர்ச்சனை நிகழ்த்தி தம் பொறுப்புகளை செவ்வனே மேற்கொண்டு, இக்கோயிலை சிறந்த வழிபாட்டுத் தலமாக உருவாக்கி வருகிறார்கள். காலை 7 முதல் 12 மணி மற்றும் மாலை 4.30 முதல் 7 மணிவரை கோயில் திறந்திருக்கும்.

சென்னையை அடுத்துள்ள மீஞ்சூர் – பொன்னேரி பாதையில் அனுப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு அருகே சுமார் மூன்று கி.மீ. தொலைவில், தேவதானத்தில் பள்ளிகொண்டு அனைவரையும் அரவணைத்து அருள்பாலிக்கிறார் ரங்கநாதர். மீஞ்சூர், பொன்னேரியிலிருந்து ஆட்டோ, வேன் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு.

தொகுப்பு: தேவதானம்

The post மரக்காலால் நெல்மணியளந்த பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Nelmaniyalanda ,
× RELATED திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்