- குட்டு
- கர்நாடகா உயர் நீதிமன்றம்
- பெங்களூரு
- தில்லாலங்கடி
- குஷால்நகர், குடகு மாவட்டம், கர்நாடகா
- தின மலர்
பெங்களூரு: பலாத்காரம், மிரட்டல் புகார் மூலம் பொய்யான எப்ஐஆர் தாக்கல் செய்து, 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய ‘தில்லாலங்கடி’ பெண் தொடர்பான வழக்கில் போலீசுக்கு கர்நாடகா ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் குஷால்நகரில் வசிக்கும் காபி தோட்ட உரிமையாளர் விவேக் மற்றும் தீபிகா இருவரும் கடந்த 2022 ஆகஸ்ட் 28ம் தேதி மைசூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இந்த நிலையில் அதே ஆண்டு செப். 8ம் தேதி விவேக் மீது தீபிகா பாலியல் பலாத்கார புகாரை போலீசில் அளித்தார். இருதரப்பையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், செப்டம்பர் 19ம் தேதி தீபிகா அளித்த இரண்டாவது புகாரில், விவேக் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் தன்னை கைவிட்டுவிட்டதாகவும் கூறினார். இந்த விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிமன்றத்தில் விவேக் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில், ‘தீபிகா பல ஆண்களை மணந்துள்ளார். அந்த வகையில் 10வது திருமண வழக்கில் விவேக் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விசயத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, ‘கடந்த 2011ம் ஆண்டு முதல், 10 பேருக்கு (கணவர் அல்லது வேறு நபர்கள்) எதிராக பாலியல் பலாத்காரம், கொடுமைப்படுத்துதல், மிரட்டல், ஏமாற்றுதல் போன்ற பல்வேறு புகார்களை தீபிகா அளித்துள்ளார். பெரும்பாலான புகார்கள் பெங்களூருவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும், சிக்கபள்ளாபூர் மற்றும் மும்பையில் தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தீபிகா மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டதாக ஐந்து புகார்களை தாக்கல் செய்துள்ளன. இவ்விசயத்தில் பலமுறை நோட்டீஸ் அளித்தும் புகார்தாரரான தீபிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. புகார்தாரர் எந்த காரணமும் இல்லாமல் பல ஆண்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்தின் விசாரணையில் அவர் குற்றம் சாட்டப்பட்டார் என்று தெரியவருகிறது.
அவரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை பார்க்கும் போது, இது பாலியல் தொழில் போன்றுள்ளது. தீபிகாவின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. தீபிகா தன்னுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களை துன்புறுத்துவதற்காக பாலியல் புகார்களை கொடுத்துள்ளார். அவரது இதுபோன்ற செயல்களால் 10க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தீபிகாவின் நடவடிக்கைகள் நீண்டகால திட்டமிட்ட மோசடியாகவே கருதுகிறேன். எனவே தீபிகா அளிக்கும் புகாரை, முறையான முதற்கட்ட விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்கு பதிவு செய்யக்கூடாது. இதுபோன்று அடுத்தடுத்து பலர் மீது வழக்கை பதிவு செய்யக்கூடாது. எனவே தீபிகாவின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் முறையில் விளம்பரப்படுத்தி, அவருடன் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வழக்கில் விவேக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிடுகிறேன்’ என்று தெரிவித்தார்.
The post பலாத்காரம், மிரட்டல் புகார் மூலம் பல பொய்யான எப்ஐஆர்; 10 பேரை திருமணம் செய்த ‘தில்லாலங்கடி’ பெண்ணுக்கு குட்டு: போலீசுக்கு கர்நாடகா ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.