×

மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை: ஒன்றிய அமைச்சர் வீடு எரிப்பு.! பெட்ரோல் குண்டுகளுடன் 1000 பேர் குவிந்ததால் பதற்றம்

இம்பால்: கலவரம் நீடிக்கும் மணிப்பூரில், 1,000க்கும் மேற்பட்டோரை கொண்ட வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டுகளுடன் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டை எரித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் மெய்டீஸ் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி மலைவாழ் மக்கள் நடத்திய பேரணியால் கடந்த 2 மாதமாக வன்முறை சம்பவங்கள் தொடர்கிறது. இதில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். குக்கி இன மக்கள் வாழும் மலைப்பகுதிகளிலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இதற்கிடையே கடந்த புதன்கிழமை வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 1,000க்கும் மேற்பட்டோரை கொண்ட வன்முறை கும்பல், இம்பாலின் கோங்பா பகுதியில் உள்ள ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் மோதிய வன்முறையாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மீது வீசினர். சிலர் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுங்கினர். தீயணைப்பு வீரர்களும், பாதுகாவலர்களும் விரைந்து செயல்பட்டதால், பெரிய அளவில் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த வன்முறை கும்பல் அதே பகுதியில் பயன்பாட்டில் இல்லாத 2 வீடுகளை தீ வைத்து எரித்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. நோங்க்மெய்பங்க் மற்றும் வாங்க்கெய் பகுதிகளில் மக்கள் கற்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை வைத்து முக்கிய வீடுகளை தடுத்து பாதுகாப்பு படையினருடன் சண்டையில் ஈடுபட்டனர். வன்முறை தொடர்வதால் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காமன்லோக்கில் கடந்த புதன்கிழமை வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடப்பதாகவும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மாநில முதல்வர் பிரேன் சிங் உறுதி அளித்துள்ளார்.

The post மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை: ஒன்றிய அமைச்சர் வீடு எரிப்பு.! பெட்ரோல் குண்டுகளுடன் 1000 பேர் குவிந்ததால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Union ,Imphal ,Riot ,Union Minister ,RK Ranjan Singh ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதம், வெடிமருந்து பறிமுதல்