×

மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை; உறுதியாக இருக்கிறோம்: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை; உறுதியாக இருக்கிறோம் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். டெல்லியில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் ஆளும்கட்சியினர்தான் அமளியில் ஈடுபடுகிறார்கள்.

நாடாளுமன்றத்தின் மாடத்தில் இருந்து பார்த்தால் ஆளும்கட்சியினரின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமளி, ஜனநாயகத்தில் இதுவரை காணமுடியாத ஒன்று. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய போது மைக்கை அணைத்து இடையூறு செய்தனர். எதிர்கட்சி தலைவர் பேச எழுந்தாலே அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார்.

“மணிப்பூர் குறித்து விரிவான விவாதம் தேவை”:

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்; குறுகிய கால விவாதம் கூடாது என்று திருச்சி சிவா தெரிவித்திருக்கிறார். அவையில் விவாதம் நடைபெறாமல் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் காரணம் இல்லை; ஆளும்கட்சியினரே காரணம். மணிப்பூர் பிரச்சனை பற்றி தீவிரத்துடன் விவாதிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வந்து பேச வேண்டும் என்பது தவறான கோரிக்கை அல்ல. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை; உறுதியாக இருக்கிறோம். மணிப்பூர் குறித்த விவாதத்துக்கு பிரதமர் வந்து பதிலளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றும் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை; உறுதியாக இருக்கிறோம்: திருச்சி சிவா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Trichy Shiva ,Delhi ,Trichi Siva ,
× RELATED மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு,...