×

மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறதுள்: வக்பு வாரிய சட்ட திருத்தம் உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பிரதமர் மோடி தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், அதுதொடர்பான மசோதா ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனாலும், இந்த மசோதாவும் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், இக்கூட்டத்தொடரில் அதானி, மணிப்பூர் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஏற்கனவே இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கும் (செபி) அதானி குழுமத்திற்கும் ரகசிய உறவு இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி வரை லஞ்சம் தர தங்கள் நாட்டில் முறைகேடுகள் செய்திருப்பதாக அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதானி குழுமம் குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஆதரவைக் கோரும் வகையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் ஒன்றிய அரசு சார்பில் நேற்று நடத்தப்பட்டது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ஒன்றிய அமைச்சரும் பாஜ தேசிய தலைவருமான ஜேபி நட்டா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், திமுகவின் திருச்சி சிவா, அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், எல்ஜேபி (ராம்விலாஸ்) கட்சியின் அருண்பாரதி என 30 கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அதானி, மணிப்பூர் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. காங்கிரஸ் எம்பிக்கள் கவுரவ் கோகாய், பிரமோத் திவாரி ஆகியோர் பேசுகையில், ‘‘அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு, அதானி மீதான லஞ்சப் புகார் குறித்து விவாதம் நடத்த வேண்டும். இது நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பிரச்னை.

இதுபோன்ற இந்திய நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் பாதிக்கக் கூடிய பிரச்னைகளை ஒன்றிய அரசு நிராகரிக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது’’ என்றனர். இதே போல மணிப்பூர் விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்திய காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், ‘‘ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு விவகாரங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், பயங்கரமான வன்முறை வெடித்த போதிலும், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மீது மட்டும் ஒன்றிய அரசு இன்று வரையிலும் நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டும்’’ என்றார். வக்பு வாரிய மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டுமென திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பீகாருக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டுமெனவும், அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களின் நலன்களை உறுதி செய்ய அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமெனவும் லோக்ஜனசக்தி எம்பி அருண் பாரதி வலியுறுத்தினார்.

ஆந்திராவில் கடந்த 2014ல் மாநில பிரிவினையின் போது அளித்த வாக்குறுதிகளில் நிலுவையில் இருப்பவற்றை நிறைவேற்ற வேண்டுமென தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். அனைத்து கட்சி கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘அதானி, மணிப்பூர் விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தெந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்துவது என்பது குறித்து அவைத் தலைவர்களின் ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்ட குழுக்கள் தீர்மானிக்கும். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஆதரவு தர வேண்டுமென அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியான ஒருநாளைக்குப் பிறகு நாடாளுமன்றம் கூட இருப்பதால், இன்றைய முதல் நாளில் இருந்தே இரு அவைகளிலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

* கூட்டுக்குழு அவகாசம் நீட்டிக்கப்படுமா?
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த அறிக்கை சமர்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென குழுவில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு குழு தலைவரான பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் மறுத்துவிட்டார். எனவே இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இது குறித்து பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘கூட்டுக்குழு அவகாசத்தை நீட்டிக்க விதிமுறையில் இடமுண்டு. இதைப் பற்றி மக்களவை அலுவல் ஆலோசனை குழுவில் தான் பேச வேண்டும். தற்போதைக்கு எந்த விவாதமும் நடக்கவில்லை’’ என்றார். அறிக்கை தாக்கல் செய்த பிறகே, வக்பு வாரிய மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* திமுக எழுப்ப உள்ள விவகாரங்கள் என்ன?
திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘திமுக சார்பில் இரு அவைகளில் எழுப்ப உள்ள விவகாரங்கள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்தோம். அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்க கோரியுள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்த முடியும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்பதால் அதுகுறித்து விவாதிக்க வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்துள்ளது குறித்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை எழுப்பப்படும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, பள்ளிக்கல்விக்கான சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி குறித்து அவைகளில் பேச உள்ளோம்.

அதைப்போன்று ஜிஎஸ்டி வரிப்பகிர்வை முறையாக மாநில அரசுகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மேலும் செஸ் வரி மூலம் பெறப்படும் நிதி மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதுகுறித்தும் வலியுறுத்தப்படும். ரயில்வே திட்டங்கள் பல ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ளது. நடப்பு திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு நிதி வழங்குவது, வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் ஆகியவை குறித்து திமுக தரப்பில் வலியுறுத்தி அழுத்தம் தரப்படும்’’ என்றனர்.

The post மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறதுள்: வக்பு வாரிய சட்ட திருத்தம் உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Manipur riots ,Adani ,Vakpu Board ,New Delhi ,EU government ,Vakpu ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும்...