×

மணிப்பூரில் நடந்த கொடூரத்துக்காக பிரதமரும் ஒன்றிய அரசும் வெட்கப்பட வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்..!!

டெல்லி: மணிப்பூரில் 2 பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி பெரிய கொந்தளிப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த கொடூரத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: வெறுப்பும் வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்கும் வகையில் கொடூரம் அரங்கேறியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்: பல்வேறு நாடுகள், மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூரை பற்றி சிந்திக்கக்கூட நேரம் ஒதுக்கவில்லை. மணிப்பூரில் பிரென் சிங் ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத்: மணிப்பூரில் நடந்த கொடூரத்துக்காக பிரதமரும் ஒன்றிய அரசும் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே: 38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது; ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி சிவா: மணிப்பூர் கலவரத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கபில் சிபல்: மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்த பிறகே பிரதமர், மணிப்பூர் கொடூரம் பற்றி வாய் திறந்துள்ளார் என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.

அசாதுதீன் ஓவைசி: மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரை மவுனம் காத்த பிரதமர், நிர்பந்தம் காரணமாகவே தற்போது வாய்திறந்துள்ளார். மணிப்பூரில் இனப்படுகொலை நடந்து வருகிறது, அம்மாநில முதல்வரை நீக்கினால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று அசாதுதீன் ஓவைசி குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ.பி.எஸ்: கொடூரம் நடந்து 2 மாதங்களுக்கும் பிறகு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

The post மணிப்பூரில் நடந்த கொடூரத்துக்காக பிரதமரும் ஒன்றிய அரசும் வெட்கப்பட வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Manipur ,Political Party ,Delhi ,Manipur riots ,Party ,
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்