×

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!: 3 மாதங்களுக்கு முன் காணாமல் போன 2 மாணவர்கள் சடலமாக கிடக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பு..!!

மணிப்பூர்: மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த மெய்தீ சமூகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் சடலமாக கிடக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் பழங்குடியினர் அந்தஸ்து தொடர்பாக மெய்தீ, குக்கீ சமூகத்தினரிடையே கடந்த மே 3ம் தேதி வன்முறை வெடித்தது. 5 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த வன்முறையில், 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும், லட்சக்கணக்கானோர் சொந்த வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதற்றம் தணிந்த நகரங்களில் 2 நாட்களுக்கு முன்பு இணையசேவை முடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான 2 மாணவர்கள் சடலங்களின் புகைப்படத்தால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் காணாமல் போன மெய்தீ சமூகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் சடலமாக கிடக்கும் புகைப்படமும், அதற்கு முன்பு பாதுகாப்பு முகாம் அருகே துப்பாக்கி ஏந்திய இருவர் பின்னணியில் உயிரோடு இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஆயுதம் ஏந்திய குழுக்கள் 2 மாணவர்களை கொன்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இறந்த மாணவர்கள் 17 வயதுடைய லிண்டோயின் காம்பி, 20 வயதான ஹெம்ஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொடுங்குற்றத்தை செய்தவர்களுக்கு நிச்சயமாக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மணிப்பூர் முதலமைச்சர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாணவர்கள் படுகொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? சடலங்கள் எங்கு கிடக்கிறது? என்பது குறித்து ஒன்றிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மணிப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!: 3 மாதங்களுக்கு முன் காணாமல் போன 2 மாணவர்கள் சடலமாக கிடக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Meithee ,
× RELATED மணிப்பூர் தாக்குதல் துரதிஷ்டவசமானது,...