சென்னை: சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் ஜான் பாய் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து அதில் உள்ள கட்டிடக்கழிவுகளை அகற்றும் வேலையை அப்துல் காதர் மற்றும் அவரது மகன் முகமது பாசில் ஆகியோர் ரவிக்குமார் என்பவர் மூலம் மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இரவு ரவிக்குமார் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி மூலம் கட்டிடக்கழிவுகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாஜ கட்சியைச் சேர்ந்த 76வது வார்டு வட்டத் தலைவர் ஜனார்த்தன குமார், திருவிக நகர் தொகுதி பொதுச்செயலாளர் தேவராஜ் மற்றும் திருவிக நகர் தொகுதி தெற்கு மண்டல தலைவர் முரளி ஆகியோர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டு மாமூல் கேட்டுள்ளனர்.
இதில் ஜனார்த்தனன் குமார் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் ஜேசிபியின் ஹெட் லைட்டை அடித்து நொறுக்கினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து அவர்கள் கிளம்பிச் சென்று விட்டனர். ஜேசிபியின் உரிமையாளர் சந்தோஷ் என்பவர் இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா, இதுகுறித்து விசாரணை நடத்தி ஜனார்த்தனகுமார் (39) மற்றும் முரளி (45) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தேவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மாமூல் கேட்டு மிரட்டிய விவகாரம் பாஜ நிர்வாகிகள் 2 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.