×

முறைகேடு தடுக்கப்பட்டதால் உலர் சாம்பல் விற்பனையில் வருவாய் அதிகரிப்பு: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: முறைகேடு தடுக்கப்பட்டதால், மின்வாரியத்தின் சாம்பல் விற்பனை, முதல்முறையாக கடந்த ஆண்டில், ரூ.218 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக மின்வாரியத்திற்கு, சேலம் மாவட்டம் மேட்டூரில், 1,440 மெகாவாட்; துாத்துக்குடியில், 1,050; திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 1,830 மெகாவாட் திறனில், அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக தினமும் சராசரியாக, 60,000 டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.

அதிலிருந்து, பல நுாறு டன், உலர் சாம்பல் வெளியோகிறது. உலர் சாம்பலை கையாள மின்வாரியம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக சிமெண்ட், கட்டுமான செங்கல் தயாரிப்பாளர்கள். கல்நார் ஷீட்டு தயாரிப்பு மற்றும் தயார் நிலை கான்கிரீட் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் வாயிலாக உலர் சாம்பல் விற்கப்படுகிறது. இதன் மூலம் 2023- 24ம் ஆண்டில் ரூ.218.12 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மின் வாரியம் அதிகாரிகள் கூறியதாவது: மொத்த சாம்பலில், 20 சதவீதம் செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட சிறு தொழில்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. மீதம் உள்ளவை, அதிக விலை கோரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், குறைந்த விலைக்கு, எடை குறைவாக வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தன. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதைத் தடுக்க, கடந்த இரு ஆண்டுகளாக சிமென்ட், கல்நார் ஷீட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, நீண்ட கால ஒப்பந்தங்கள் வாயிலாக, சாம்பல் விற்கப்படுகிறது. மேலும், சாம்பல் பிரிவில் ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், சாம்பல் விற்பனை வருவாய் முதல் முறையாக, 2023 – 24ம் ஆண்டில், ரூ.218 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2022- 23ம் ஆண்டில் ஈட்டப்பட்ட நிதியை விட 14.32 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர்கள் கூறீனர்.

The post முறைகேடு தடுக்கப்பட்டதால் உலர் சாம்பல் விற்பனையில் வருவாய் அதிகரிப்பு: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Power Board ,CHENNAI ,Electricity board ,Tamil Nadu Power Board ,Mettur ,Salem district ,Tuticorin ,Atthipat ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 1.50...