×

முறைகேட்டை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நிலையில் 3 ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவல்; சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் திருப்பம்

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ள நாளில், 3 ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர் மாநகராட்சிக்கு சமீபத்தில் நடந்த மேயர் தேர்தலின் போது, பாஜக – ‘இந்தியா’ கூட்டணி இடையே போட்டி இருந்தது. பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ‘இந்தியா’ கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார். மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. ‘இந்தியா’ கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. அதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

மேயர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடை ஆம் ஆத்மி கோரியது. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார். ‘ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தனது மேயர் பதவியில் இருந்து மனோஜ் சோன்கர் திடீரென விலகினார்.

இந்நிலையில் சண்டிகர் மாநகராட்சியின் மூன்று ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களான பூனம் தேவி, நேஹா முசாவத், குர்சரண் கலா ஆகியோர் நேற்று டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மனோஜ் சோன்கர், தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், 3 ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதியதாக மேயர் தேர்தல் நடத்தினால், பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The post முறைகேட்டை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நிலையில் 3 ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவல்; சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : AMADMI ,BJP ,Supreme Court ,Chandigarh ,Chandigarh Municipality ,Ahmadmi ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு...