×

கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் கம்பீரமாக நிற்கும் நீர்த்தேக்க தொட்டி

*மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் கம்பீரமாக உள்ள நீர்த்தேக்க கட்டிடத்தின் மூலம் கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது.

இந்த தொட்டிக்கு அருகாமையில் கிணறு ஒன்று அமைந்துள்ளது.இந்த கிணற்றிலிருந்து மூன் மோட்டார் மூலம் நீரை மேலே ஏற்றி இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட நீர் தேக்கத் தொட்டியில் தேக்கி திருச்சியிலிருந்து விழுப்புரம் மற்றும் சென்னை நோக்கி செல்லும் நீராவி என்ஜின்களுக்கு நீரை வழங்கி வந்தனர்.

குறுகிய ரயில் பாதையாக இருக்கும்போது நீராவி என்ஜின்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. காலப்போக்கில் குறுகிய ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு டீசல் எஞ்ஜின் மூலம் சில ரயில்களும் அதிக எண்ணிக்கையில் மின்சாரத்தின் மூலமும் இயக்கப்பட்டு வருவதால் நீராவி என்ஜின் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுப்பதற்கு கொள்ளிடத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி தேவையில்லாமல் இருந்தாலும் அந்த தொட்டி நூறாண்டுகளை கடந்தும் வலிமை குன்றாமல் அப்படியே இருந்து வருகிறது. இந்த தொட்டிக்கு தண்ணீரை எடுப்பதற்கு பயன்படும் கிணற்றில் உள்ள தண்ணீர் நன்னீராக இருந்து வருகிறது.

பல பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிய போதிலும் இந்த கிணற்றில் உள்ள தண்ணீர் நன்னீராக இருந்து வருகிறது. ரயில்வே துறையால் இந்த கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டி நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றில் நன்னீர் இருந்து வருவதால் இதனை எடுத்து குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு வினியோகிக்க முடியும்.இதன் மூலம் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

எனவே இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை வழக்கம் போல மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி தேக்கி வைத்து அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் கம்பீரமாக நிற்கும் நீர்த்தேக்க தொட்டி appeared first on Dinakaran.

Tags : Kollidam railway ,Kollidam ,Kollidam railway station ,Kollidam, Mayiladuthurai district… ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...