சென்னை: வேளச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா டப்பிங் கலைஞரை தாக்கி நகை, பணம் பறித்த வழக்கில் பிரபல கொள்ளைக்காரியை போலீசார் கைது செய்தனர். இவர், வேளக்காரி போல் நடித்து திருச்சியில் பெண் ஒருவரை கொலை செய்து நகைகள் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. சினிமா மற்றும் சின்னத்திரை டப்பிங் கலைஞரான இவர், கடந்த 2014ம் ஆண்டு, வேலை கேட்டு வந்த அறிமுகம் இல்லாத பெண் ஒருவரை, வீட்டு வேலைக்காரியாக பணி அமர்த்தியுள்ளார். லட்சுமியிடம் அவர் நன்மதிப்பு பெற்று, அவரது வீட்டிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 12.4.2014 அன்று, வீட்டில் தனியாக இருந்த டப்பிங் கலைஞர் லட்சுமியை கொலை செய்யும் நோக்கில் அந்த பெண் பலமாக தலையில் தாக்கியுள்ளார். அதில் அவர் மயங்கியதும், லட்சுமி அணிந்து இருந்த 8 சவரன் செயின், 4 சவரன் வலையல்களை மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் மயக்கம் தெளிந்த லட்சுமி, இதுபற்றி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வீட்டில் கைரேகைகளை பதிவு செய்து தலைமறைவான பெண்ணை தேடி வந்தனர். ஆனால், அந்த பெண் குறித்த எந்த விவரமும் இல்லாததால், அவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை விசாரணை நடத்த ‘புலன் விசாரணை பிரிவு’ என தனியாக அமைக்கப்பட்டது. அந்த புலன் விசாரணை பிரிவில் உள்ள போலீசார் அடையாறு காவல் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் விவரங்களை அந்தந்த காவல் நியைங்களில் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், வேளச்சேரி குற்றப்பிரிவில் கடந்த 9 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்த சினிமா டப்பிங் கலைஞர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருடன் இணைந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் பதிவான கைரேகைகளை எடுத்து, பரங்கிமலையில் உள்ள கைரேகை பிரிவுக்கு அனுப்பி வைத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது, திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லையில் ஆதாய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கத்தை சேர்ந்த காந்தி (64) என்ற பெண் குற்றவாளி கைரேகையுடன் அது ஒத்துப்போனது. உடனே போலீசார் திருச்சி சென்று ஜீயபுரம் காவல் நிலைய போலீசாரின் உதவியுடன் ஆதாய கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து கடந்த மார்ச் 27ம் தேதி தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளைக்காரியான காந்தியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், வேலைக்காரி போல் வீட்டில் பணியாற்றி டப்பிங் பெண் கலைஞர் லட்சுமியை கொலை செய்யும் வகையில் தலையில் தாக்கி 12 சவரன் நகைகள், ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், இதுபோல் தமிழகம் முழுவதும் தனியாக வசிக்கும் வயதான மற்றும் வசதியான பெண்களிடம், தன்னை ஆதரவு இல்லாத பெண் என்று கூறி வீட்டு வேலைக்கு சேர்ந்து பல இடங்களில் நகைகள் மற்றும் பணத்தை திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்தனர். கடந்த 9 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசார் குழுவுக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
The post ஆதரவற்ற பெண் எனக்கூறி, வீட்டு வேலைக்காரியாக சேர்ந்து டப்பிங் கலைஞரை தாக்கி நகை, பணம் பறித்த பிரபல கொள்ளைக்காரி கைது appeared first on Dinakaran.
