×

தோஷங்களை போக்கும் மஹாளயபட்சம்

சிறப்புகள் தரும் மாதம் சித்திரை. வளம் தரும் மாதம் வைகாசி. அற்புதங்கள் நிகழும் மாதம் ஆனி. அம்பாளின் ஆசிகள் தரும் மாதம் ஆடி. ஆன்ம பலம் தரும் மாதம் ஆவணி என்று வரிசையாக ஒவ்வொரு மாதத்தின் சிறப்பையும் சொல்லிக் கொண்டே வந்தால், புண்ணியம் தரும் மாதம் புரட்டாசி என்று புரட்டாசி மாதத்தின் பெருமையைச் சொல்லலாம். தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் புரட்டாசி மாதம். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில்தான் மஹாளயபட்சம் வருகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஒரே ஒரு தினம் மட்டும் நம்முடைய முன்னோர்கள் நம்மிடையே வந்து நாம் தரும் உபசாரங்களை ஏற்று ஆசி வழங்கிச் செல்லுகின்றார்கள். இந்த மகாளயபட்சத்தில் 15 நாட்கள் நம்மோடு தங்கியிருந்து நமக்கு ஆசி வழங்குகிறார்கள் என்பது புரட்டாசி மாதத்திற்கு உரிய ஏற்றம். அதைப் போலவே மகாளயபட்சம் முடிந்த அடுத்த நாளிலிருந்து நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகிறது.

முதலில் நீத்தார் கடன், பின் தெய்வ வழிபாடு

கடன்களில் இரண்டு கடன்கள் முக்கியம். ஒன்று நீத்தார் கடன். அடுத்து தெய்வகடன். இந்த இரண்டு கடன்களும் அடைபட வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசி மாதம். இது ஆறாவது மாதம். ஜோதிட சாஸ்திரத்தில் ஆறாவது ராசி என்பது ருண பாவம் என்பார்கள். அதாவது கடன்களைக் குறிக்கும் ராசி என்பார்கள். அதனால் இந்த மாதம் கடன்கள் அடையும் மாதம் எனலாம். முன்னோர்கள் கடனை முடித்துவிட்டுத் தான் தெய்வ வழிபாட்டுக்கு வர வேண்டும். இந்த சாஸ்திர உண்மையை விளக்கும் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளையும் உற்சவங்களையும் பற்றி விரிவாகக் காண்போம். முதலில் முன்னோர்கள் வழிபாடாகிய மகாளய பட்சத்தில் சிறப்புகளைப் பார்த்துவிட்டு பிறகு புரட்டாசிக்கு உரிய மற்ற சிறப்புகளையும் தெய்வ வழிபாட்டு நிகழ்வுகளையும் பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

பிதுர் தோஷம் என்ன செய்யும்?

ஜாதக தோஷங்களிலேயே மிகவும் கடுமையான தோஷம், பிதுர்தோஷம் என்பார்கள். மற்ற தோஷங்கள் மிக எளிதான பிராயசித்தங்களுக்கு கட்டுப்படும். ஆனால் பிதுர்தோஷங்கள் அவ்வளவு எளிதாகக் கட்டுப்படாது. அவை குடும்பத்தில் பலவிதமான பிரச்னைகளை உண்டாக்கி கொண்டே இருக்கும். அதற்கு அடையாளமாக எத்தனை முயன்றும் குடும்பம் விருத்திக்கு வராதது, எந்த நல்ல காரியத்திலும் கடைசி நேரத்தில் தடை ஏற்படும், வாழ்வதில் திருப்தி இருக்காது. சரியான வருமானம் இல்லாமல் இருக்கும். தொழில்கள் தொடர்ந்து நஷ்டமடையும். குழந்தைகளுக்கு உடல்நிலை அவப்பொழுது சீர்கெடும். தாம்பத்தியம் முறையாக இல்லாமல் இருக்கும். விவாகரத்து, அகால மரணங்கள், அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வது என சொல்லிக் கொண்டே போகலாம். பிதுர் கடன் அடைக்க வேண்டும்இப்படிப்பட்ட விளைவுகள் எல்லாம் பிதுர்தோஷத்தின் விளைவுகள் என்றுதான் சொல்கிறார்கள். இது தலைமுறை தலைமுறையாகக் கூட சில குடும்பத்தில் இருப்பதை நாம் பார்க்கின்றோம். தெய்வ வழிபாடு இருந்தாலும்கூட இந்த பிதுர்தோஷம் அல்லது பிதுர் சாபம் நீங்காத வரை, இப்படிப்பட்ட இடையூறுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதையும் பார்க்கின்றோம். எனவேதான், எந்தக் கடனை கழித்தாலும் கழிக்கா விட்டாலும் பிதுர் கடனை கழிக்காமல் விடாதே என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு அமாவாசை அன்றும் எள்ளும் நீரும் இறைத்து தென்புலத்தில் வசிக்கும் முன்னோர்களின் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும்.

மஹாளயம் என்றால் என்ன?

மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளயபட்சம் என்று கூறுகிறோம். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை. அதற்கு முந்தைய பிரதமை ஆரம்பித்து 15 நாள்களும் முன்னோர்களை வழிபட பல்வேறு புண்ணிய பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் ஒரு பலன் உண்டு. முன்னோர்களின் ஆசியால் செல்வம், புத்திர பாக்கியம், பகையற்ற வழக்கை, கல்வி, புகழ் ஆகியன கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். இந்தப் பதினைந்து நாள்களும் வீட்டில் சுபகாரியங்கள் செய்ய மாட்டார்கள். வீடுகளில் இந்த நாள்களில் முன்னோர் வழிபாடுகளை முடித்த பின்னே கோலமிடுதல் விளக்கேற்றுதல் போன்ற வழக்கமான கடமைகளைச் செய்வார்கள். இந்தப் பதினைந்து நாள்களும் உணவில் எளிமை வேண்டும். அசைவ உணவுகள் கூடாது. ஆடம்பர விழாக்களைத் தவிர்க்க வேண்டும். கிடைக்கும் நேரங்களில் இறைவழிபாடு, நாம ஜபம் செய்துவர வேண்டும்.

எப்போது தொடங்கி எப்போது நிறைவடையும்?

இந்த ஆண்டு மகாளயபட்சம் செப்டம்பர் 18ம் தேதி புதன்கிழமை துவங்கிவிட்டது. அக்டோபர் 02ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது அன்று வரை அதாவது செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 02 வரையிலான 15 நாட்களும் மகாளயபட்சம் காலமாக சொல்லப்படுகிறது. மகாளயபட்ச காலத்தில் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்றும், வீட்டிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். சிலர் 15 நாட்களுமே தர்ப்பணம் கொடுப்பார்கள். அல்லது முக்கியமான நாள்களில் பிதுர் தர்ப்பணம் செய்வார்கள். இதுவரை முன்னோர்களை வழிபட தவறியவர்கள், பித்ரு சாபம் மற்றும் தோஷத்தால் வாடுபவர்கள் மகாளயபட்ச காலத்தில் முன்னோர்களை மனதார வழிபட்டு, அவர்களின் ஆசியைப் பெறலாம்.

ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் பலன் – பகுதி 1

இந்தப் பதினைந்து நாள்களும் முன்னோர் வழிபாடே பிரதானம். எல்லா நாள்களும் முன்னோர்களை வழிபட்ட பிறகே வழக்கமான பூஜைகளைச் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்த பிறகே வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிப் பிற பணிகளைத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டு மகாளயபட்ச நாள்களில் முக்கிய திதிகள் எவை? செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து அறிந்துகொள்வோம். மகாளயபட்சத்தின் முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும். மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நான்காம் நாளான சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளின் தொல்லை இல்லாமல் வாழலாம்.

ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் பலன் – பகுதி 2

ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துக்கள் கிடைக்கும். மேலும் வீடு, நிலம் முதலான சொத்துக்களை வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். ஆறாம் நாளான சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும், புகழும் கிடைக்கும். ஏழாம் நாளான சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் உத்தியோகத்தில் தலைமை பதவி கிடைக்கும், தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். எட்டாம் நாளான அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும். ஒன்பதாம் நாளான நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமணத்தடை நீங்கும். சிறந்த வாழ்க்கை துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அல்லது மருமகன் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் பலன் – பகுதி 3

பத்தாம் நாளான தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலைகளில் வளர்ச்சி அடைவார்கள். பன்னிரண்டாம் நாளான துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்க நகைகள் சேரும். விலை உயர்ந்த ஆடை சேர்க்கை உண்டாகும். பதின்மூன்றாம் நாளான திரியோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். பதினான்காம் நாளான சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலை முறையினருக்கு நன்மை உண்டாகும். பதினைந்தாம் நாளானது மகாளய அமாவாசை. மகாளயபட்சத்தில் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள்

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளயபட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இதில் முக்கியம் மஹாளயம்.

மஹாளயத்தில் செய்ய முடியாவிட்டால் வேறு என்று செய்வது?

மஹாளயத்திலும் அமாவாசையிலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நிற்கிறார்கள். தங்களுக்குத் தரப்படும் தர்ப் பணத்தை (எள் கலந்த தண்ணீரை) பெற்றுக் கொண்டு நல்லாசி வழங்குகிறார்கள். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கான வழிபாடு இல்லை எனில் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். மஹாளய பட்சத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு சிராத்தமானது, கயா சிராத்தத்திற்கு சமமான பலன் என்றும், மஹாபரணியை 5 மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் 10 பங்கு அதிக மாகவும் மத்யாஷ்டமி 20 மடங்கு அதிகமாகவும், துவாதசி புண்ய காலத்தை 100 மடங்கு அதிகமாகவும் மஹாளய அமாவாசையை 1000 மடங்கு அதிகமாகவும் புண்ணியத்தை கொடுக்கக் கூடியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால், மஹாளயபட்சத்தில், மஹாளய சிராத்தம் செய்ய முடியாவிடில், பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால், பிரதமை, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்தசி, வெள்ளிக் கிழமை கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

The post தோஷங்களை போக்கும் மஹாளயபட்சம் appeared first on Dinakaran.

Tags : Audi ,Ambala ,Avani ,
× RELATED கம்பர்நத்தம் சிவாலயம்