×

மதுரை மாநகரின் மாண்புகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவ.சதீஸ்குமார்

1. சிவபெருமானின் நிரந்தர முகவரி

சிவபெருமானை “தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும். இறைவா போற்றி” என்று போற்றுகிறோம். அதாவது இறைவன் தென்னாட்டை உடையவனாக இருக்கிறான். ஆனால், எல்லா நாட்டவர்களாலும் போற்றப்படும் இறைவனாக இருக்கிறான் என்பது பொருள். ‘எந்நாட்டவர்க்கும் இறைவன்’ என்பது எந்த நாட்டமுடையவர்களுக்கும் இறைவன் என்பதும் உட்பொருளாகும். இறைவன் எங்கும் நிறைந்திருப்பவர் என்பதால்,

‘‘பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம்’’

– என்று பெரியோர் போற்றுவர்.

ஒருமுறை ஔவையார் நெடுந்தொலைவு நடந்துவந்த அசதியால் ஒரு கோயிலுக்குச் சென்று, கருவறைக்கு நேராகக் கால்நீட்டி அமர்ந்தாராம். அப்போது ‘‘இறைவன் இருக்கும் திசையை நேக்கிச் கால்நீட்டலாமா?” என்று சிலர் கேட்டபோது, ‘‘இறைவன் இல்லாத திசையைக் காட்டுங்கள்” என்று ஒளவையார் சொன்னதாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது திண்ணம். இதை அறியாத இரணியனிடம் பிரகலாதன் சொன்னதை,

‘‘சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச்சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்;
இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்;
இத்தன்மை காணுதி விரைவின்’’ என்றான்; ‘‘நன்று’’ எனக்கனகன் சொன்னான்.’’

– என்று அறிவிக்கிறார் கம்பர்.

தூணிலும் இருப்பதாகச் சொன்னதால் தூணிலிருந்து வெளிப்பட்டார் நரசிங்கமூர்த்தி என்பது புராணம். இறைவனைப் பூக்கொண்டு பூசிக்கிறோம். ஆனால், அந்தப் பூக்குள்ளும் அந்த இறைவனே புகுந்திருக்கிறான் என்பதை, ‘‘பார்க்கின்ற மலரோடு நீயே இருத்தி’’ என்கிறார் தாயுமானார். ஆகவே, இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது எல்லோரின் கருத்து.

ஆனால், சைவத் தலைவனாகிய சிவபெருமான், எங்கும் இருந்தாலும் நிலையாகத் தங்கியிருப்பது மதுரையில்தான். தனது நிரந்தர முகவரி மதுரைதான் என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆம். சைவத்திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் முதலாவதாகவுள்ள திருமுகப் பாசுரம் சிவபெருமான் பாடியது. அதில்,

‘‘அன்னம் பயில்பொழில் ஆலவாயில்
மன்னிய சிவன்யான்’’

– என்கிறார்.

அதாவது, ஆலவாய் என்றால் மதுரை; அங்குதான், தான் நிலைபெற்றிருப்பதாக வாக்குமூலம் தந்திருக்கிறார்.

2. மதுரையின் பெயர்கள்

மதுரைக்கு ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம், மதுரையம்பதி, விழாமலிமூதூர், கம்பலை மூதூர், கன்னிபுரம், பூலோக சிவலோகம் போன்ற பெயர்கள் உள்ளன.

3. இலக்கியங்களில் மதுரை

சங்க இலக்கியத்தில் ஒன்றான மதுரைக்காஞ்சி, மதுரையைச் சிறப்பித்துப் பாடுகிறது. பரிபாடலானது மதுரைக்கோயிலை தாமரையின் பொகுட்டாகவும் சுற்றியுள்ள தெருக்களை இதழ்களாகவும் பாவித்து,

‘தாமரைப் பூவோடு புரையும் சீரூர், பூவின்
இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
அரும்பொருட்டு அணைந்தே அண்ணல் கோயில்’

– என்று குறிப்பிடுகிறது.

ஆம், ஒருமுறை அரசு அதிகாரிகள் அயல்நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்த்துவிட்டு செறிவாக, நெய்வேலி என்கின்ற நகரை கட்டமைக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த காமராசர் `வெளிநாட்டுக்கெல்லாம் போக வேண்டாம், மதுரை மாநகருக்குச் சென்று பாருங்கள்.

அது கட்டமைக்கப்பட்ட நகரம். அதைப் போல நீங்களும் அந்த நெய்வேலியை நிர்மாணம் செய்யலாம்’ என்று சொல்ல, மதுரையை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு செய்ததாக ஒரு வரலாறு உண்டு. பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம் மதுரையில் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களை அழகுறப் பதிவு செய்துள்ளது.

மேலும் புறநானூறு, கலித்தொகை, போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் மதுரையைப் போற்றுகின்றன.
குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், மீனாட்சியம்மைக் குறம் ஆகிய இலக்கியங்கள் பாடியுள்ளார். மேலும், சொக்கநாத வெண்பா, சொக்கநாதர் உலா, மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி, மீனாட்சியம்மைக் கலிவெண்பா போன்ற இலக்கியங்கள் மதுரையை மையமாகக் கொண்டவை.

4. தமிழும் மதுரையும்

மூன்று சங்கங்கள் வைத்து முத்தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கே உண்டு. அதனால், மும்மைத் தமிழ் மதுரை, மும்மைத் தமிழ்க்கூடல், மதிரேசன் தண்தமிழ் நாடு, முச்சங்கம் வளர்கூடல், சேய்மாடக்கூடல், நெடுமாடக்கூடல், நான்மாடக் கூடல், பெருவளம் சுரந்த விரிதமிழ்க்கூடல், வெண்சங்கு மொய்க்கும் சங்கத்தமிழ்க்கூடல் என்று பல பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

5. மதுரை – பெயர்க் காரணம்

மதில் சூழ்ந்த நகரமாதலால் மதில் துறை என்றாகி, மதிறை என்பது பின் மதுரை என்றானது என்பது தேவநேயப் பாவாணர் கருத்து. பூவின் தேனுக்கு ‘மது’ என்று பெயர். பூக்கள் நிறைந்த பகுதியாதலால் மதுரை என அழைக்கப்பட்டது எனலாம். மதுரையை ஒட்டிய வையையாற்றின் துறை மருதந்துறை எனப்படும். அந்த மருதந்துறையே திருமருதப் பூந்துறை என்றும் மருதோங்கு முன்துறை என்றும் திருமருதநீர்ப் பூந்துறை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூரே மருதை என்றாகி பின் மதுரை என்று அழைக்கப்பட்டது.

சங்கப் புலவர்கள் கூடி தமிழாய்ந்ததால் ‘கூடல்’ என்றும் ஒருசமயம் பாம்பு ஒன்று நகரின் எல்லையில் கிடந்து மன்னனுக்கு எல்லையைக் காட்டியது. ஆலம் என்றால் விஷம். அந்த விஷத்தை வாயில் உடைய பாம்பு எல்லை வாயிலைச் காட்டியதால் ஆலவாய் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.

6. மதுரையும் முக்தியும்

மதுரையில் எழுந்தருளியுள்ள சொக்கரதரின் திருநாமத்தை ஓதினால் துன்பமும் பகையும் கெட்டு, செல்வம் ஓங்கும். அந்த நாமம் எங்கும் நம்மைக் காக்கும். ஏன் சொர்க்கமே எளிதாகும் என்பதை,

“சொக்கன் என்று ஒருகால் ஓதின் துயர்கெடும் பகையும் மாளும்
சொக்கன் என்று ஒருகால் ஓதின் தொலைவிலாச்செல்வம் உண்டாம்
சொக்கன் என்று ஒருகால் ஓதின் சுருதிசொல் யாண்டும் செல்லும்
சொக்கன் என்று ஒருகால் ஓதின் சொர்க்கமும் எளிதாம்அன்றே”

– என்ற பாடல் சொல்கிறது.

மேலும், ஒரு பாடல் மதுரைக்கு இணையான ஒரு தலமில்லை. அங்குள்ள தீர்த்தத்திற்கு இணை வேறில்லை; சுந்தரேஸ்வரன் போல் இகபர சுகமும் இணையிலா வீடுபேறும் தருவார் இல்லை என்று குறிப்பிடுகிறது.

7. சொக்கர் எத்தனைச் சொக்கரடி

சோமசுந்தரக் கடவுளுக்கு கற்பூரசுந்தரர், கடம்பவனசுந்தரர், கலியாண சுந்தரர், அபிராமசுந்தரர், சண்பக சுந்தரர், கத்தூரி சுந்தரர், பழி அஞ்சிய சுந்தரர், மகுடசுந்தரர், ஆலவாய் சுந்தரர், நான்மாடக் கூடல் நாயகர், மதுரபதி வேந்தர், சமட்டி விச்சாபுர வேந்தர், சீவன் முத்திபுரநாதர், பூலோக சிவலோகதிபர், கன்னிபுரீசர், மூலலிங்க நாதர், மூர்த்தி, மதுரைப் பேராலவாயான், இறையனார் என்று பல பெயர்கள் உண்டு. ஆனாலும், சொக்க வைக்கும் அழகுடன் சுடர் விடுவதால் இவர் சொக்கர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இந்த சொக்கரை அவரிடம் மயக்கம் கொண்ட பெண் ஒரு கிளியை தூதாக அனுப்பும்போது
சொக்கரின் திருப் பெயர்களைப் பட்டியலிடுவதை,

‘‘புழுகுநெய் சொக்கர், அபிடேகச் சொக்கர் கர்ப்பூரச் சொக்கர்
அழகிய சொக்கர், கடம்பவனச் சொக்கர், அங்கயற்கண்ணி
தழுவிய சங்கத்தமிழ்ச் சொக்கரென்று சந்ததம் தீ
பழநிய சொற்கும்பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே’’

என்று மதுரைக்கலம்பகம் பதிவு செய்துள்ளது.

இந்த சொக்கநாதரின் பெயருடன் சொக்கநாத வெண்பா என்றே ஓரிலக்கியம் தோன்றியுள்ளது. இதை இயற்றியவர் தருமையாதீனத்தின் குரு முதல்வரான குருஞான சம்பந்தர் ஆவார். தருமையாதீனத்தின் ஆன்மார்த்த பூஜாமூர்த்தி சொக்கநாதப் பெருமான்தான். ஆன்மார்த்த மூர்த்தியை நினைந்து பாடியதே சொக்கநாத வெண்பா. இதில் சொக்கநாத என்ற சொல்லுடன் ஒவ்வொரு வெண்பாவும் நிறைவடைவதால் இது சொக்காத வெண்பா எனப்பட்டது. அதில் ஒரு பாடல்,

“உன்னைச்சிங் காரித் துனதழகு பாராமல்
என்னைச்சிங் காரித் திடர்ப்பட்டேன் – பொன்னை
அரிவையரையே நினையும் அன்பிலேற் குந்தாள்
தருவையோ சொக்கநா தா.”

என்பது.

8. சொக்கரும் செந்தமிழும்

முச்சங்கம் வைத்து முறையே தமிழ்வளர்த்த மதுரையில் முதற்சங்கத்தின் தலைவராக வீற்றிருந்து தமிழ் வளர்த்தவர் சிவபெருமான். இவ்வரிய வரலாற்றை,

‘‘சிறைவான் புனல்தில்லை சிற்றம்பலத்தெம் சிந்தையுள்ளம் உறைவாய்; உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் புகன்றனையோ”

என்று பாடுகிறது திருக்கோவையார்.

இந்த சொக்கநாதப் பெருமான் தருமிக்காக பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று சொல்லும் வகையில்

‘‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே’’

என்ற பாடலை இயற்றி நக்கீரருடன் வாதம் புரிந்து, பின் நக்கீரரைத் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்தார் என்கிறது திருவிளையாடற் புராணம். இறைவன் தருமிக்கு பொற்கிழி அருளுவதற்காக புலவராக வடிவுதாங்கி தமிழ்ச்சங்கம் ஏறினார். இதனை,

‘‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம்ஏறி
நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்’’

என்று பாடுகிறார் திருநாவுக்கரசர்.

இதன்மூலம் உலக இலக்கியங்களெல்லாம் இறைவனைப் பாடிக்கொண்டிருக்க, அந்த இறைவனே இறங்கி வந்து இலக்கியம் பாடிய சிறப்பு தமிழுக்கே உரியது என்ற உண்மை புலப்படும்.

9. நெற்றிக்கண்ணும் கயற்கண்ணும்

மீனாட்சி என்ற சொல்லின் தூய தமிழ்ச்சொல் அங்கயற்கண்னி என்பதாகும். அதாவது, அழகிய மீனைப்போன்ற கண்களை உடையவள் என்பது அதன்பொருள். நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் நக்கீரரை தன் கண்ணால் எரித்துத் தமிழ் வளர்த்தார். சிவபெருமான் இட்ட சாபம்போக கயிலைக்கு திருப்பரங்குன்றம் வழியாகச் செல்லும்போது அங்கு பூதத்திடம் மாட்டிக்கொண்ட நக்கீரர், திருமுருகாற்றுப்படையைப் பாடினார். ஆக, திருமுருகாற்றப்படை தோன்றவும் முக்கண் கடவுளே மூலாதாரமாவார்.

முக்கண் கடவுள் இப்படி தமிழ்வளர்க்க, தெளிதமிழ் மதுரையில் வளருமோர் இளமயிலாகிய அங்கயற்கண் நாயகி, மீனாட்சியும் அருந்தமிழ் வளர்ந்தாள். ஐந்து வயதுவரை பேசாத குமரகுருபரர் திருச்செந்தூர் முருகன் திருவருளால் பேசும் பேறு பெற்று மதுரைக்கு வருகிறார். இங்கு வந்து மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழைப் பாடுகிறார். அப்படிப் பாடும்போது,

“தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம் வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும்இள வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே”

என்ற பாடலைப் பாடும்போது, அந்த அங்கயற்கண்ணியே அழகிய குழந்தையாக வடி வெடுத்துவந்து திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து குமரகுருபரரின் குழவித்தமிழை ரசித்து தன் கழுத்திலிருந்த முத்துமாலையை குமர குருபரருக்கு வழங்கினார் என்பது வரலாறு. இப்படி முத்தமிழ் வளர்த்த அங்கயற்கண்ணியிடம் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், தான் நன்கு பாட,

‘‘தவியாது கேட்பவர்க்கு எல்லாம் இனிதுறச்
சாற்றவும் நாற்கவி பாடவும் அருள் செய்வாய்
தென்கூடற் கயற்கண்ணியே’’

என்று பாடுகிறார்.

மேலும், அம்பிகையிடம், தான் படும் துன்பங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, இது அடுக்குமா? என்ற தொனியில்,

‘‘சாணாம் உயிற்றிக்குப் பலகோடி தீமைகள்
தாம்புரிந்து மாணா உலுத்துரை: வள்ளன்
மையீர் அன்று வாழ்த்திச் சுற்றும் நாணாது
உழல்கின்ற நாயேன் படுதுயரங்கள் அனைத்தும்
காணாது இருப்பதென் தென்கூடல் வாழும் கயற்கண்ணியே’’

என்று பாடுகிறார்.

இவ்வாறு தமிழ்ப்புலவர்கள் போற்றும் வகையில் தமிழரசியாக விளங்கினாள் தடாதகைப் பிராட்டி.

10. மீனாட்சியின் கிளி

பறவையினங்களிலேயே பேசும் தன்மை வாய்ந்தது கிளி மட்டும்தான். அதனால் அதனைக் குழந்தையாகவே பாவித்து கிளிப்பிள்ளை என்றே அழைப்பர். “சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’’ என்பர். வனவாசம் முடித்து வந்த ராமனிடம், தான் அன்பாக வளர்த்த பெண் கிளியைக் கொடுத்து ‘தங்களுக்குப் பிடித்த ஒரு பெண்ணின் பெயரைச் சூட்டுங்கள் என்று சொல்கிறாள் சீதை. அப்போது `கைகேயி’ என்று பெயர் சூட்டுகிறான் ராமன்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்லவா? மந்தரை சொன்னதையெல்லாம் மந்திரித்துவிட்டதைப் போல் அவள் சொன்னதால், கைகேயி என்று கிளிக்குப் பெயரிட்டது பொருத்தம்தான். ஆனால், அன்னை அங்கயற்கண்ணியின் கையில் இருக்கும் கிளிக்கு சொல்புத்தியோடு சுயபுத்தியும் இருந்தது. மதுரையில் வாழ்ந்த கிளிகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே தொன்மையும் மேன்மையும் கொண்ட மதுரையின் பெருமையைப் பேசுகின்றனவாம். இதனைப் புலவரொருவர்,

‘‘ஆடல்புரியும் அரன் என்றும் வேர்த்தமிழ்ப் பாடல் புரியும் பரன் என்றும் – கூடலிலே
நன்னாரி வாசிக்கு நடை பயிற்றினோன் என்று கின்னரி வாசிக்கும் கிளி’’

என்கிறார்.

இந்த கிளிக்கூட்டத்தில் ஒன்றே இறைவியின் கரத்தலத்தில் இருக்கிறது. அம்பிகை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களைக் காண்கிறாள். அனைவரும் வேண்டுகிறார்கள். அனைவரின் வேண்டுதலையும் அன்னை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அன்னையிடம் முறையிடும்போது அவள் கையில் இருக்கும் கிளி, நம் குறைகளைக் கேட்டுக் கொள்கிறது. இறைவி இளைப்பாறி ஓய்வாக இருக்கும்போது தான் கேட்டுக்கொண்டிருந்த நம் குறைகளையெல்லாம் எடுத்துச் சொல்லும். ஆகவே, அங்கயற்கண்ணியிடம் வேண்டும் வேண்டுதல்கள் கட்டாயமாக நிறைவேறும். அதற்கு அவளின் கைக்கிளியும் ஒரு பெருங்காரணமாகும்.

11. ஏன் மீனாட்சி என்று பெயர்

பர்வதராஜன் மகள் என்பதால் பார்வதி, ஆட்சி செலுத்துவதால் தடாதகை, தட்சன் மகளாதலால் தாட்சாயிணி என்ற பெயர்களைத் தாங்கிய அன்னைக்கு மீனாட்சி என்ற பெயர் வந்ததற்குக் காரணமுண்டு. உலக உயிர்களிலேயே உறங்காமல் இருப்பது மீன் மட்டுமே. மீன்போன்ற கண்களையுடைய அம்பிகையும் உறங்காமல் இருந்து அருள்வதால் மீனாட்சி என்ற பெயர் பெற்றாள்.

ஆம் மேற்கண்டவாறு, தான் குறைகளைக் கேட்பதோடு கையிலுள்ள கிளியும் குறைகளைக் கேட்டு, அன்னையிடம் சொல்வதால் அவளுக்கு தூங்குவதற்கு நேரமே இல்லாமற்போகிறது. எனவே, உறங்கா விழியுடைய அன்னை என்பதால் இவள் மீனாட்சி எனும் பெயர்பெற்றாள்.

12. முதல் பெண் அரசி

பெண்களுக்குச் சொத்துரிமை தரலாமா? பெண்களுக்கு ஆளுமைத் திறன் உண்டா? என்று அவ்வப்போது கேள்விக்கணைகள் பெண்களைத் துளைத்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் மீறி உலகிலேயே ஒரு நாட்டின் முதல் பெண் அரசியாக பட்டம் சூடியவள் மீனாட்சிதான். சித்திரைத் திருவிழா வரும்போது அன்னை முறையே பட்டாபிஷேகம் ஏற்றுக்கொள்கிறாள்.

பின் திக்விஜயம் செய்கிறாள். அனுதினமும் நடைபெறும் பள்ளியறைப் பூஜைக்கு எழுந்தருளும்போது ஓர் அரசிக்கு வழங்கப்படும் “பராக் பராக்’’ என்ற கட்டியம் முழங்கிய பின்பே எழுத்தருளுகிறாள். இங்கு அன்னையிடம்தான் அதிகமாக செங்கோல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

13. கால்மாறி ஆடிய காரணம்

யோகமார்க்கத்தில் இத்தலம் துவாதசாந்தத் தலமாகப் போற்றப்படும். இதை,

“காலத் தொடுகற் பனைகடந்த
கருவூ லத்துப் பழம்பாடற்
கலைமாச் செல்வர் தேடிவைத்த
கடவுள் மணியே உயிரால
வாலத் துணர்வு நீர்பாய்ச்சி
வளர்ப்பார்க் கொளிபூத்தருள்பழுத்த
மலர்க்கற் பகமே எழுதாச்சொல்
மழலை ததும்பு பசுங்குதலைச்
சோலைக் கிளியேஉயிர்த்துணையாம்
தோன்றாத் துணைக்கோர் துணையாகித்
துவாத சாந்தப் பெருவெளியில்
துரியங் கடந்த பரநாத
மூலத் தலத்து முளைத்தமுழு
முதலே முத்தம் தருகவே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்தம் தருகவே”

என்ற பாடலில் `துவாத சாந்தப் பெரு வெளியில் துரியங் கடந்த பரநாதமூலத் தலத்து முளைத்த முழுமுதலே’ என்று குறிப்பிடுகிறார் குமரகுருபரர். இத்தலத்தில் உலகில் எங்கும் இல்லாத வகையில் சிவபெருமான் இங்குள்ள வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடுகிறார். விக்கிரம பாண்டியனின் மகன் இராஜசேகர பாண்டியன் மதுரையை ஆண்டுவந்த காலத்தில் அவனுடைய அவைக்கு சோழநாட்டுப் புலவன் வந்து, “ எம் கரிகாலனைவிட நீ சிறியவன். அவனுக்கு அறுபத்து நான்கு கலைகளும் தெரியும்.

ஆனால், அதில் ஒன்றான நடனக்கலை உனக்குத் தெரியாது’’ என்று எள்ளி நகையாடுகிறான். அப்போது பரதம் கற்ற இராஜசேரன் ஆடலிலுள்ள அழுத்தம் அறிந்து கால்மாறி ஆடுமாறு விண்ணப்பிக்க இறைவன் இடக்காலுக்கு பதிலாக வலக்காலை மாற்றி ஆடினார் என்பது வரலாறு.

14. தங்கத்தாமரைக் குளத்தின் தனிச்சிறப்பு

மதுரைக் கோயிலின் மையத்தில் அழகே உருவான அற்புதக் குளம் ஒன்று உண்டு. அது “பொற்றாமரைக் குளம்’’ என்று புகழப்படுகிறது. அந்த பொற்றாமரைக் குளத்தின் மூலமாகத்தான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாக செவிவழிச் செய்தி உண்டு. திருக்குறளைக் குறள் வெண்பா என்கின்ற யாப்பில் திருவள்ளுவர் செய்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

பொற்றாமரைக் குளத்தில் நூலை இடுவோம். நல்ல நூல் என்றால் அது நமக்குத் தரட்டும். இல்லாவிட்டால் மூழ்கிப் போகட்டும் என்று சொல்ல, அந்தப் பொற்றாமரைக் குளத்திலிருந்து சங்கப் பலகையில் திருக்குறள் நீந்தி வந்தது என்று சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல் பொற்றாமரைக் குளத்தில் இன்று வரைக்கும் மீன் வளர்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post மதுரை மாநகரின் மாண்புகள் appeared first on Dinakaran.

Tags : Madurai City ,Kunkum Anmikam ,Shiv.Satheeskumar ,Lord ,Shiva ,Madurai ,
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு