×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடர்பாக ஒன்றிய அரசின் முதன்மை செயலாளர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பணியை துரிதப்படுத்த உத்தரவிடக்கோரி 2019ம் ஆண்டு ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்த போது, 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என ஒன்றிய அரசு தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படாததால் ஒன்றிய அரசின் முதன்மைச் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : High Court ,Union Government ,AIIMS Hospital ,Madurai ,Chief Secretary of State ,Union ,AIIMS ,Dinakaran ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை