×

மஞ்சள் பைகள் தயாரிக்கும் மதுரை தம்பதியினர்!

நன்றி குங்குமம் தோழி

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டனர் மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் சுப்ரமணியன் மற்றும் கெளரி தம்பதியினர். இவர்கள் மஞ்சள் பைகள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அதனை தயாரித்தும் வருகின்றனர். தங்களின் ‘மஞ்சள் பை’ நிறுவனத்தில், 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் 400 பெண்களுக்கு துணிப்பைகள் தைப்பது குறித்து பயிற்சிகளையும் வழங்கியுள்ளனர் இந்த தம்பதியினர்.

நம்முடைய சுற்றுச் சூழலுக்கு பாதகம் விளைவிக்காத பொருட்களைதான் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிறுவனத்தை நடத்தி வருவதாக தம்பதியினர் கூறுகின்றனர்.

‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை. எம்.பி.ஏ படிச்சி முடிச்சிட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். என் மனைவி கெளரி எம்.எஸ்.சி பட்டதாரி. அவங்களும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தாங்க. எங்களுக்கு கல்யாணமான சில வருடங்களில், சென்னைக்கு வேலை மாற்றம் ஏற்பட்டது.

அதனால் நாங்க சென்னையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நாங்க தங்கியிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் பள்ளிக்கரணை ஏரி இருந்தது. அழகான ஏரி என்றாலும் அங்குதான் அதிகமா குப்பைகளை கொட்டுவாங்க. அந்த பகுதிகளில் காத்துல பிளாஸ்டிக் கவர்கள் பறப்பதை பார்க்கலாம். பிளாஸ்டிக் கவர்களில் இருக்கும் மைக்ரோ மென் துகள்கள் காற்றின் வழியாகவோ அல்லது நாம் சாப்பிடும் உணவுகள் மூலமாகவோ நம் உடம்புக்குள்ள போகக்கூடியது.

அந்த மென்துகள்கள் நமக்கு புற்று நோயை உண்டாக்கும். குழந்தைக்கு கொடுக்கும் தாய் பால் வரை மென் துகள்கள் கலந்திருப்பது பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதனாலேயே என் குழந்தைகளை பள்ளிக்கரணை ஏரி வழியாக அழைத்து செல்ல மாட்டேன். பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக நிறைய படிக்க தொடங்கினேன். நான் மட்டுமில்லாமல் என்னுடைய மனைவியும் என்னுடன் இது குறித்து தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் வந்தது. அதன் பிறகு எங்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளையே எடுத்துட்டு போகத் தொடங்கினோம். கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வாழ்க்கையில பிளாஸ்டிக்கை தவிர்க்க ஆரம்பித்தோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி கௌரி. அவர் மஞ்சள் பை நிறுவனம் துவங்கியது குறித்து விவரித்தார்.

‘‘எங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தா மட்டும் போதாது. மற்றவங்களுக்கும் இதை சொல்லணும். அப்பதான் நாம நினைச்ச மாற்றத்தை கொண்டு வர முடியும். அதனால் கூட வேலை செய்றவங்க பக்கத்து வீட்டுக்காரங்கன்னு எல்லோருக்கும் துணிப்பைகளை பயன்படுத்துங்கன்னு சொல்லி இதை ஒரு பிரச்சாரமாகவே எடுத்துக் கொண்டு போனோம். பலருக்கும் நாங்க சொல்வது புரிய ஆரம்பித்தது. அவர்களும் கொஞ்சம் கொஞ்சமா மாற தொடங்கினாங்க. இதெல்லாம் 2014 காலகட்டத்தில நடந்தது.

அப்போது துணிப்பைகள் அதிகமா கடைகளில் கிடைக்காது. அதனாலேயே துணிப்பைகளை பயன்படுத்த நினைச்சாலும் அந்த பைகள் கிடைக்காத சூழ்நிலை தான் இருந்தது. இதனாலேயே நிறைய பேர் பிளாஸ்டி பைகளையே பயன்படுத்தி வந்தாங்க. துணிப்பைகள் தயாரிப்புக்கு ஒரு பெரிய மார்க்கெட் இருக்குன்னு நாங்க புரிந்து கொண்டோம். அதையே ஒரு தொழிலாக செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் மஞ்சள் பை நிறுவனம் உதயமாச்சு. நாங்க சென்னையில் வேலைப் பார்த்து வந்ததால், எங்களின் நிறுவனத்தை சொந்த ஊரான மதுரையில் ஆரம்பிக்க நினைச்சோம். சொந்த ஊரில் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எங்களின் நீண்ட கால எண்ணமும் நிறைவேறியது’’ என்றார் கெளரி.

அதிகமான பிளாஸ்டிக் பயன்பாடு, நம் பூமியின் வளத்தை நரகமாக மாற்றிவிடும். நமக்கு தேவையானது எல்லாமே இயற்கையிலிருந்து கிடைக்கிறது. நாமதான் அதை பயன்படுத்துவதில்லை. பலருக்கு இதற்கான விழிப்புணர்வு இருந்தாலும், அவசரமான வாழ்க்கை சூழலால், அதை சரியாக பின்பற்ற முடிவதில்லை. அதே சமயம் அந்தப் பொருட்கள் சரியான முறையில் கிடைத்தால் உபயோகப்படுத்த தயாராக இருக்காங்க. மதுரைக்கு வந்து ஆரம்பத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து துணிப்பைகள் தைக்க தொடங்கினோம். அதன் தையல் முறையினையும் இருவரும் கற்றுக்கொண்டோம். சிறிய அளவில் எங்களின் தயாரிப்பினை துவங்கினோம். எங்களைப் பற்றி தெரிந்தவர்கள் பைகளை வாங்க ஆரம்பித்தார்கள். ஆர்டர்களும் வரத் துவங்கியது.

நாங்க இருவர் மட்டுமே செயல்பட முடியாது என்பதால், வேலைக்கு ஆட்களை நியமிக்க முடிவு செய்து, கஷ்ட நிலையில் இருக்கும் 400 பெண்களை சந்தித்து அவர்களுக்கு துணிப்பைகள் தயாரிப்பது குறித்து சொல்லி கொடுத்தோம். அவர்களில் நன்கு தைக்க தெரிந்த பெண்கள் 30 பேரை எங்க நிறுவனத்தில் நியமித்தோம். பெண்களும் ஆர்வமா வேலை செய்தாங்க. முதலில் மளிகை கடைக்கான பைகளை தயாரிச்சோம். அடுத்து என்ன செய்யலாம்னு யோசித்து, உணவு பைகள், துணிக்கடைக்கான பைகள், கைப்பைகள், தோலில் அணிகிற பைகள், ஜோல்னா பைகள் எனப் பல வகைகளில் தயாரிச்சோம். மேலும் இவை கிழிந்தாலும் மீண்டும் தைத்துக் கொள்ள முடியும்.

பருத்தி துணிப்பைகள் குறிப்பாக நாட்டு பருத்தியினை பயன்படுத்துவதால் அவ்வளவு எளிதில் கிழியாது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. விவசாயிகள் நாட்டு பருத்தியை பயிரிடுவதில்லை. நாங்க அவர்களை சந்தித்து நாட்டு பருத்தியை பயிரிட்டால் நாங்கள் வாங்கி கொள்வதாக அவர்களுக்கு உறுதியளித்தோம். அவர்களில் சிலர் ஒப்புக் கொண்டு பயிரிட தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து எங்களின் பைகளில் உள்ள வண்ணங்களுக்கு இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த தொடங்கினோம். துணிப்பைகள் மட்டுமில்லாமல் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்குகளை உருக்கி அதை துணிப்பைகளாக மாற்றி அமைக்கிறோம்’’ என்ற கிருஷ்ணன் சமூக வலைத்தளம் மூலம் வெளிநாடுகளுக்கும் பைகளை விற்பனை செய்து வருகிறார்.

‘‘துணிப்பைக்கான பயன்பாடு அதிகம். கடைக்கு மட்டுமில்லாமல், தாம்பூல பைகளும் கேட்டனர். மேலும், துணிக்கடைகளில் அந்த நிறுவனத்தின் பெயரினை பையில் அச்சிட்டும் கொடுத்தோம். மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் செய்யத் தொடங்கினோம். எங்களின் மஞ்சள் பை நிறுவனம் துவங்கிய சில ஆண்டுகளிலேயே தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை கொண்டு வந்தது. அது எங்களின் தொழில் வளர மேலும் ஒரு உற்சாகத்தை கொடுத்தது. பிசினஸ் ஒரு பக்கம் நல்ல வளர்ச்சி அடைந்து வந்ததால், சமூகத்திற்கும் ஏதாவது செய்ய விரும்பினோம். எங்க நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களின் குழந்தைகளுக்கென கற்றல் மையம் ஒன்றை தொடங்கி மாலை நேர வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சோம்.

அங்கு அவர்களுக்கு பாடங்கள் மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் சொல்லிக் கொடுப்போம். மேலும் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். உதாரணத்திற்கு ஒரு மாணவனுக்கு பொம்மையை அழகாக வடிவமைக்கும் திறமை இருக்கும். அதை விற்பனை செய்யக் கூடிய திறமை இன்னொரு மாணவிக்கு இருக்கும். இது போன்ற தனித்திறமைகளை நாங்க ஊக்குவித்து வருகிறோம். அடுத்து வரும் தலைமுறையினருக்கு சுற்றுப்புறச் சூழல் பாதகம் விளைவிக்காமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து சிறு வயதிலேயே மனதில் பதிய வைத்தால் கண்டிப்பாக நம்முடைய வளம் அழியாமல் பாதுகாக்க முடியும்’’ என்றனர் கெளரி மற்றும் கிருஷ்ணன் தம்பதியினர்.

தொகுப்பு : மா.வினோத்குமார்

The post மஞ்சள் பைகள் தயாரிக்கும் மதுரை தம்பதியினர்! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu government ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...