×

மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரைகுறையான மழைநீர் கால்வாய் பணியால் பொதுமக்கள் கடும் அவதி

புழல்: மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல், சக்திவேல் நகர், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், கதிர்வேடு, லட்சுமிபுரம், ரெட்டேரி, கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் அரைகுறையாக பணி நடந்துள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கிணறுகளில் கழிவுநீர் கலந்து குடிநீர் மாசடைந்து வருகிறது.

இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வடமாநில ஊழியர்களிடம் கேட்டால், உரிய பதில் கூறாமல் அலைக்கழிக்கின்றனர். குறிப்பாக, புழல் சக்திவேல்நகர் 5வது தெருவில் மழைநீர் கால்வாய் பணி பாதியிலேயே விடப்பட்டதால் கழிவுநீர் தேங்கி வீடுகளில் உள்ள கிணறுகளில் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பிரச்னையில் மாதவரம் மண்டல அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”மாதவரம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் சிறிது தூரம் இடைவெளிவிட்டு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரியத்தில் இருந்து கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

இப்படி ஒருவரை ஒருவர் குறை கூறுவதால் கால்வாய் பணி முறையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். மழைகாலங்களில் அதிக மழை பெய்தால் கால்வாயில் தண்ணீர் தேங்கி வீடு மற்றும் தெருக்களில் தேங்கும் நிலை உருவாகும். எனவே, இடைவெளி விடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பணியை முறையாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரைகுறையான மழைநீர் கால்வாய் பணியால் பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Mathavaram zone ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் 2 ஆண்டாக...