×
Saravana Stores

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் 23ம் தேதி நடக்கிறது: சட்டப்பேரவை கூட்டம் குறித்து முக்கிய முடிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் கவர்னர் உரை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், கவர்னர் உரையுடன் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் செல்ல உள்ளதால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், வருகிற 23ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் கவர்னர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க வருகிற 28ம் தேதி ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். பிப்ரவரி முதல்வாரம்தான் சென்னை திரும்புகிறார். அதனால், தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்த முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். கவர்னர் உரையில், இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வருகிற 23ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது சில தொழில் நிறுவனங்களுடன் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த நிறுவனங்கள் குறித்தும், அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் 23ம் தேதி நடக்கிறது: சட்டப்பேரவை கூட்டம் குறித்து முக்கிய முடிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...