×

மக்களவையில் மணிப்பூர் விவகாரம் பிரதமர் நேரில் விளக்கம் அளிக்க அவசியம் இல்லை: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

ஸ்ரீவைகுண்டம்: மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் சுமார் 5.5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடந்தது. ஒன்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிர்மலா சீதாராமன், கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் குழிகளில் இறங்கி பார்வையிட்டனர்.

விழாவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் ‘‘100 ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்சாண்டர் ரியா கண்டறிந்த பொருட்கள் மட்டும் இன்றி வெளிநாடுகளில் உள்ள ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களையும் திருப்பிக்கொண்டு வந்து, வருங்கால தலைமுறையினர் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்\” என்றார். பின்னர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் ‘‘மணிப்பூரில் 2013ம் ஆண்டு ஓராண்டாக கலவரம் நடந்தபோது அப்போதைய உள்துறை அமைச்சர் அங்கு சென்று பார்க்கவில்லை.

தற்போது கலவரம் நடந்த பகுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டார். மணிப்பூர் கலவரம் குறித்து மக்களவையில் அமித்ஷா விளக்கம் அளிக்க தயாராக இருந்தும் அதை கேட்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்களது செயல்பாடு உள்ளது. மேலும் மக்களவைக்கு பிரதமர் நேரில் வந்துதான் ஒரு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வரும் போது பார்த்துக்கொள்ளலாம். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வோம்’’ என்றார்.

The post மக்களவையில் மணிப்பூர் விவகாரம் பிரதமர் நேரில் விளக்கம் அளிக்க அவசியம் இல்லை: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Lok Sabha ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Srivaikundam ,PM Modi ,
× RELATED ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி...