×
Saravana Stores

லெபனான், சிரியாவில் இருந்தும் ராக்கெட் வீச்சு இஸ்ரேல் மீது பல்முனை தாக்குதல்: ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் களத்தில் குதித்தன

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 5வது நாளாக உக்கிரமடைந்த நிலையில், அண்டை நாடான லெபானான் மற்றும் சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தினர். மத்திய கிழக்கு நாடுகளிலும் போர் பரவுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 7ம் தேதி அத்துமீறி நுழைந்து பயங்கர தாக்குதலை நடத்தினர். இதனால் ஹமாஸ் படையினரை குறிவைத்து, காசா மீது இஸ்ரேல் வரலாறு காணாத போர் தொடுத்துள்ளது. 5வது நாளாக நேற்றும் போர் மிகக் கடுமையாக நடந்தது. விடிய விடிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல் போர் விமானங்கள், காலையிலும் தொடர்ந்து குண்டுமழை பொழிந்தன. இதனால், காசாவில் கிட்டத்தட்ட அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகி உள்ளன.

2,200 பேர் பலி: அங்குள்ள பாலஸ்தீன மக்கள் உயிர் பிழைக்க ஒளிவதற்கு கூட இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஐநா அமைப்பு பள்ளிக் கட்டிடங்களை பாதுகாப்பு தங்குமிடங்களாக மாற்றி உள்ளது. வீடுகளை இழந்த 2.5 லட்சம் மக்கள் அங்கு தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஐநா தங்குமிடங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இப்போரில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் பலியாகி உள்ளனர். காசாவில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட பலி எண்ணிக்கை 1,055 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன.

மின் நிலையம் முடங்கியது: இதற்கிடையே, காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், மின்சாரம், குடிநீர், உணவு, எரிபொருள் ஆகியவற்றை காசாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. இதனால், காசாவில் உள்ள ஒரே ஒரு மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அந்த மின் நிலையமும் எரிபொருள் இன்றி நேற்றுடன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால் தற்போது பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. முழுக்க முழுக்க ஜெனரேட்டர்களை மட்டுமே நம்பி மக்கள் உள்ளனர். அவற்றையும் இயக்க எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.

மருந்துகளும் இல்லை: மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியமான இடங்களில் மட்டுமே ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதுகூட அடுத்த ஓரிரு நாட்களுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே இருப்பதால் அதன்பிறகு ஜெனரேட்டர்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் மருந்துகளும், உபகரணங்களும் தீர்ந்துள்ளதால் சிகிச்சை அளிப்பதற்கும் வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு 3 பாலஸ்தீன மருத்துவர்களும், 3 பத்திரிகையாளர்களும் பலியாகி உள்ளனர். இதனால் காசாவில் எந்த ஒரு இடமும் பாதுகாப்பானதாக இல்லை என அங்குள்ள நிருபர்கள் கூறி வருகின்றனர்.

கூடார நாடாகும்: கடந்த 2007ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பினர் காசாவை ஆட்சி செய்யும் நிலையில் அதன் பிறகு 4 முறை போரை எதிர்கொண்டுள்ளது. அப்போது எல்லாம் இல்லாத வகையில் இம்முறை இஸ்ரேல் மிக ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகிறது. காசா நகரில் விரைவில் கட்டிடங்களே இருக்காது வெறும் கூடார நாடாகி விடும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் நேற்று கூறி உள்ளார்.

தரை வழி தாக்குதலுக்கு ஆயத்தம்: இதுவரை வான்வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்ததாக காசாவிற்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக 1 லட்சம் ராணுவ வீரர்களுடன், 3.5 லட்சம் ரிசர்வ் ராணுவப் படையினரும் எல்லையில் குவித்துள்ளது. இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகை 93.6 லட்சமாக உள்ள நிலையில், குடும்பத்திற்கு ஒருவர் என தலா 4 லட்சம் பேர் ரிசர்வ் ராணுவ வீரர்களாக இப்போரில் களமிறங்கி சண்டையிட தயாராகி உள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் இஸ்ரேல் படை காசா பகுதிக்குள் தரைமார்க்கமாக நுழைந்து தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லா ஆதரவு: இந்த போரில் இஸ்ரேலுக்கு பல உலக நாடுகள் ஆதரவளிக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் ஆதரவு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, லெபனான், சிரியாவில் உள்ள ஆயுதம் ஏந்திய வலுவான அமைப்பான ஹிஸ்புல்லா, ஹமாசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. தற்போது ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது.

மேலும் 2 முனையில் தாக்குதல்: லெபனான் மற்றும் சிரியா எல்லையில் இருந்து இஸ்ரேல் ராணுவ நிலைகள் நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்களை ஏவி நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி தந்துள்ளது. லெபனான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேல், ஹிஸ்புல்லா படைகள் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்துள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பிடம் நீண்ட தூரம் தாக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளிட்ட வலிமையான ஆயுதங்கள் உள்ளன. இந்த அமைப்பு நினைத்தால் இஸ்ரேலின் மையப் பகுதியில் குண்டுவீசி தாக்குதல் நடத்த முடியும். இதே போல ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிப் படையும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் தாக்குதல் நடத்துவோம் என கூறி உள்ளது.

அமெரிக்கா ஆயுத உதவி: இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையேயான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கான தனது முதல் ஆயுத உதவியை அமெரிக்கா நேற்று அனுப்பி வைத்தது. ஏராளமான வெடிபொருட்களுடன் அமெரிக்க விமானம் இஸ்ரேலில் தரையிறங்கியது. இதுமட்டுமின்றி விமானம் தாங்கிய போர் கப்பலையும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 14 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், பலர் மாயமாகி இருப்பதாகவும் கடத்தப்பட்டிருப்பதாகவும் அதிபர் பைடன் குற்றம்சாட்டி உள்ளார். எனவே ஹமாஸ் நடத்திய தீய தாக்குதலுக்கான எதிர்வினையை சந்தித்தே தீர வேண்டுமென அவர் சூளுரைத்துள்ளார்.

அழியும் நிலையில் காசா: இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவி, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான நேரடி தாக்குதலாக மாற உள்ளது. இஸ்ரேல் நீண்ட கால போருக்கு திட்டமிட்டுள்ளதால் காசா பகுதி முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள பாலஸ்தீன மக்களின் உயிர் கேள்விக்குறியாகி உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவி செய்வதன் மூலம் மத்திய கிழக்கில் மோதலை தூண்டுவதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றம்சாட்டி உள்ளார்.

* 40 குழந்தைகள் தலை துண்டித்து படுகொலை
கடந்த 7ம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் படையினர், எல்லையை ஒட்டியுள்ள வேளாண் பகுதியான கபார் அசாவில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். பாரம்பரியமாக விவசாய வேலை செய்பவர்கள் வசிக்கும் கிப்புட்ஸ் எனப்படும் கிராமங்களில் ஒன்றான கபார் அசாவில் சுமார் 2 நாட்கள் பதுங்கியிருந்த ஹமாஸ் படையினர் கொடூரமான கொலைகளை அரங்கேற்றி உள்ளனர். சுமார் 40 குழந்தைகள் தலை துண்டித்து கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. பலரை எரித்து கொலை செய்துள்ளனர். கையெறி குண்டுகளை பல இடங்களில் வீசி உள்ளனர். இங்கிருந்து ஏராளமான வெடிக்காத கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடாக சடலங்களை எடுக்கச் சென்ற ராணுவ வீரர்கள், தங்கள் வாழ்நாளில் இவ்வளவு கொடூரமான கொலைகளை பார்த்ததில்லை என கூறி உள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகளை விட மோசமாக ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளதாக கூறி உள்ளனர். இதே போல இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகும் ஹமாஸ் படையினரை ஐஎஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.

* இந்தியர்களுக்கு தூதரகம் உதவி
இஸ்ரேலில் சிக்கி உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உதவிகள் வழங்கத் தயாராக இருப்பதாக அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதற்காக 24 மணி நேர அவசர உதவி எண்கள் (+972-35226748 மற்றும் +972-543278392) மற்றும் இமெயில் முகவரி (cons1.telaviv@mea.gov.in) நேற்று வெளியிடப்பட்டது. இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இதில் அதிகளவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். காசாவில் வசிக்கும் 4 இந்தியர்களும் தொடர்பில் இருப்பதாக ரமல்லாவில் உள்ள இந்திய பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் காசாவில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள் 24 மணிநேர அவசர உதவி எண் மூலம் இந்திய பிரதிநிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* போப் வலியுறுத்தல்
வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வாராந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போப் பிரான்சிஸ், ‘‘ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது. ஆனால் அவர்களின் முற்றுகையால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்படுகிறார்கள். பயங்கரவாதமும் தீவிரவாதமும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதலுக்கு எந்த ஒரு தீர்வையும் எட்ட உதவாது. மாறாக வெறுப்பு, வன்முறை மற்றும் பழிவாங்கலை தூண்டி, இரு தரப்பினருக்கும் துன்பத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

* இஸ்லாமிக் பல்கலை. குண்டுவீச்சில் தகர்ப்பு
காசாவில் ஹமாஸ் படையினர் முக்கிய தளங்களில் ஒன்றான இஸ்லாமிக் பல்கலைக்கழக கட்டிடத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தகர்த்தன. கல்வி நிலையமான இந்த பல்கலைக்கழகத்தை ஹமாஸ் அழிவிற்கான பயிற்சி மையமாக மாற்றி இருந்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. ராணுவ உளவு பணிகளுக்கும், ஆயுதம் தயாரிக்கவும், இளைஞர்களுக்கு போர் பயிற்சி தரும் களமாகவும் இப்பல்கலைக்கழகம் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

* போர்க்கால ஒற்றுமை அரசு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவ தளபதியுமான பென்னி காண்ட்ஸ் இடையேயான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போர்கால ஒற்றுமை அரசாங்கம் மற்றும் போர்கால அமைச்சரவையை அமைக்க ஒப்புதல் ஏற்பட்டுள்ளது. போர்க்கால அமைச்சரவையில் நெதன்யாகு, காண்ட்ஸ், தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் 2 உயர் அதிகாரிகள் என 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதன்படி, போர் ஓயும் வரை, போருக்கு சம்மந்தமில்லாத எந்த சட்டத்தையும், முடிவையும் அரசு நிறைவேற்றாது.

* சொந்த மக்களை மீட்க உலக நாடுகள் தீவிரம்
இஸ்ரேல் ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வருவதால், இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க உலக நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. ஜெர்மனி தனது நாட்டைச் சேர்ந்த 16 மாணவர்களை ஜோர்டான் வழியாக நேற்று பத்திரமாக மீட்டுச் சென்றது. பிரான்ஸ் தனது நாட்டு மக்களை அழைத்து வர டெல் அவிவில் இருந்து பாரீசுக்கு இன்று மீட்பு விமானத்தை அனுப்புவதாக அறிவித்துள்ளது. காசாவில் சிக்கி உள்ள அமெரிக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்களை பத்திரமாக மீட்பது குறித்து எகிப்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது காசாவில் இருந்து வெளியேற ஒரே வழி எகிப்து ஒட்டிய ரபா பகுதி வழியாக மட்டுமே செல்ல முடியும். அங்கும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேற உதவும் வகையில் அப்பகுதியில் சண்டை கட்டுப்பாடுகளை கொண்டு வர அமெரிக்காவும், எகிப்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

The post லெபனான், சிரியாவில் இருந்தும் ராக்கெட் வீச்சு இஸ்ரேல் மீது பல்முனை தாக்குதல்: ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் களத்தில் குதித்தன appeared first on Dinakaran.

Tags : Israel ,Lebanon ,Syria ,Hezbollah ,Tel Aviv ,Hamas ,
× RELATED லெபனானின் பால்பெக் நகர மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு