×

கும்மிடிப்பூண்டி அருகே துணை மின்நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே துரைநல்லூர் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் இருந்து கவரப்பேட்டை, பழவேற்காடு சாலை, ஆவூர், மங்கலம், சின்னகாவனம், பெரியகாவனம் உள்பட பல்வேறு சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு நாள்தோறும் மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் எதிரொலியாக துரைநல்லூர் துணை மின்நிலையத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டு பகுதிகளில் புயல் நேரத்தின்போது கீழே விழும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அகற்றுவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இன்று காலை நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக்ஜம் புயல் எதிரொலியாக பாதிக்கப்படும் பகுதிகளில் மின்சாரம் தொடர்பான பணிகளுக்கு உடனடியாக மின்வாரிய ஊழியர்களை அனுப்பி சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ உள்பட பல்வேறு மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே துணை மின்நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Tamil Nadu Power Board ,Durainallur ,Dinakaran ,
× RELATED மின்வாரியத்துக்கு ரூ.519 கோடி ஒதுக்க ஆணையம் அறிவுறுத்தல்