×

கோவை மாவட்ட வளர்ச்சிக்காக 6 முக்கியத் திட்டங்களை அறிவித்து சிக்ஸர் அடித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மாவட்டத்தில் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டார். இரண்டாம் நாளின்போது, ரூ.300 கோடியில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கோவை மாவட்ட வளர்ச்சிக்காக 6 முக்கியத் திட்டங்களை அறிவித்தார்கள். இந்த திட்டங்களை வெளியிட்டு கோவையில் சிக்ஸர் அடித்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்த 6 புதிய திட்டங்கள்.

(1) கோவையில் உள்ள குறிச்சி சிட்கோவில் தங்க நகை தொழிற்சாலை பூங்கா ஒன்று 126 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படும். இந்த பூங்காவில் சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL) அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் செயல்படும். இதன் மூலம் நேரடியாக 2,000 பேருக்கும், மறைமுகமாக 1,500 பேருக்கும் வேலை கிடைக்கும்.

(2) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சென்னையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட இராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தைப் போன்றே, கோவையில், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 36,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில், மூன்று மில்லியன் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த தகவல் தொழில்நுட்ப வளாகம், கோயம்புத்தூர் மாநகரத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக நிச்சயம் அமையும்.

(3) அவிநாசி சாலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு தொய்வாக நடைபெற்ற உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரையிலான உயர்மட்ட மேம்பாலச் சாலை பணிகள் முடுக்கி விடப்படுவதுடன், மக்களின் கோரிக்கையை ஏற்று, சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 600 கோடி ரூபாய்ச் செலவில் இந்த உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிக்கப்படும்!

(4) தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித – விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், பயிர்சேதங்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கவும் சுமார் 7 கோடி ரூபாய்ச் செலவில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.

(5) கோட்டூர், வேட்டைக்காரன் புதூர், உடையகுளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 38 கிராமங்களுக்கு பயனளிக்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 26 கோடி ரூபாய்ச் செலவில் மேம்படுத்தப்படும். பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 295 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 51 கோடி ரூபாய்ச் செலவில் மேம்படுத்தப்படும்.

(6) முதலமைச்சர் அவர்களின் கள ஆய்வுப் பணிகளின்போது அவரைச் சந்தித்த பல்வேறு தரப்புப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கோயம்புத்தூர் மாநகராட்சியில், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள சாலைகள், பாதாளச் சாக்கடைப் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், அதிக குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மண்சாலைகள், இவற்றையெல்லாம் தரமான தார்ச் சாலைகளாக மேம்படுத்திட, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்புகளை கோவை மாநகர மேம்பாட்டிற்காக வெளியிட்டபோது விழாவில் திரளாகக் கூடியிருந்த கோவை மாநகர பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

The post கோவை மாவட்ட வளர்ச்சிக்காக 6 முக்கியத் திட்டங்களை அறிவித்து சிக்ஸர் அடித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.S. ,Goa ,K. Stalin ,Govai ,Tamil Nadu ,Shri. ,M. K. Stalin ,Father Periyar Library and Science Laboratory ,Goa District ,MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க...